TNPSC group 4 VAO exam announcements: தமிழகத்தில் TNPSC யின் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி இம்மாதம் வெளியாகுமா என தேர்வர்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. இந்த அரசு வேலைக்காக சில வருடங்களை தியாகம் செய்து லட்சக்கணக்கானோர் தயார் செய்து வருகின்றனர். அதுவும் குரூப் 4 மற்றும் விஏஓ பணியிடங்களுக்கு போட்டி கடினமாக இருக்கும். ஏனெனில் ஒரே ஒரு தேர்வு எழுதி தகுதிப் பெற்றால் உடனே வேலை. மேலும் 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4 முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 2021 வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என தேர்வர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதவி அரசு வழக்கறிஞர், ஜியாலஜிஸ்ட் மற்றும் ஐடிஐ முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு, தகுதியுள்ள தேர்வர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட வேண்டிய குரூப் 4, VAO தேர்வுகள் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக தேர்வர்கள் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு வெளியிடும்பட்சத்தில் குரூப் 4 தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை விரைந்து வெளியிட வேண்டும் தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனெனில் குரூப் 1 மற்றும் குரூப் 2 பணிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் குரூப் 4 தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின் படி நடக்குமா அல்லது புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்படுமா என தேர்வர்கள் குழம்பியுள்ளனர். இதனால் குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil