தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை 10,117 ஆக அதிகரித்துள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 152க்கு மேலும், SCA பிரிவினருக்கு 151க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2-3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. தட்டச்சர் பணியிடங்களுக்கு 5 மதிப்பெண்கள் வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 10 மதிப்பெண்கள் வரையிலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வாகும் குறிப்பிட்ட பிரிவினருக்கு 130 மதிப்பெண்களுக்கே வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.