தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை இறுதிப் பட்டியலுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் தற்போது 9491 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2024 அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தகுதி பெற்றவர்கள் இணையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரியில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக முதன்முறையாக இறுதிப் பட்டியலுக்கு முன்னதாக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கமாக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னரே டி.என்.பி.எஸ்.சி இறுதி விடைக்குறிப்புகளை வெளியிடும். தற்போது இறுதிப்பட்டியலுக்கு முன்னதாக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.