தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூன் 9) டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையத்தில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
இந்தக் குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
விண்ணப்பதாரர்கள் கருமை நிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (கருப்பு மை பந்து புள்ளி பேனா) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகை புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்த பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள் காலை 9 மணிக்கு வழங்கப்படும். தொடர்ந்து விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.
9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் 12.45 மணிக்கு முன்பு தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் (ஹால் டிக்கெட்) தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும்.
தேர்வர்கள் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் குறிப்பிட்ட பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும்.
ஓ.எம்.ஆர் விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றை சரிபார்த்து, விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தங்களுடைய வினாத்தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு, கையொப்பமிடவேண்டும்.
தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படாது.
ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள் உள்ளேயோ அல்லது வெளியிலோ விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்த முறைகேட்டிலும் ஈடுபட்டாலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.