டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்வுக்கு 3 வாரங்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு தேர்வர்களிடம் எழுந்தது. இந்தநிலையில், ஜூன் 1 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.
பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.
இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், நீங்கள் விண்ணப்பித்த தேர்வுகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
அதில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “