TNPSC Group 4 Exam; இன்னும் ஒரு வாரத்தில் குரூப் 4 தேர்வு; கடைசி நேரத்தில் எப்படி படிக்க வேண்டும்?
TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும்; கடைசி ஒரு வாரத்தில் எப்படி படிக்க வேண்டும், எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது இங்கே
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசி வாரத்தில் எவ்வாறு தயாராவது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. அந்த வகையில் மே 27 குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் மிகத் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசி வாரத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
கடைசி வாரத்தில் முடிந்தவரை எதையும் புதிதாக படிக்க வேண்டும். இந்தக் கடைசி ஒரு வாரத்தை முழுமையாக ரிவிஷன் செய்ய ஒதுக்குங்கள். குறிப்பாக நீங்கள் குறிப்பு எடுத்தை திரும்ப திரும்ப படித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள் என ஜெஷ்வர் டீச்சிங் யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழ் மற்றும் கணிதப் பிரிவுக்கு இந்த ஒரு வாரத்தில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் ஒதுக்குங்கள். தமிழைப் பொறுத்தவரை புதிய புத்தகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பையும், பழைய புத்தகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையும் நன்றாக படித்துக் கொள்ளுங்கள். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் முக்கிய பாடம் என்பதால் நன்றாக படித்துக் கொள்ளுங்கள்.
கணித பிரிவுக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் மற்றும் தனியார் மெட்டீரியல்களில் உள்ள கணக்குகளை நன்றாக பயிற்சி செய்து பாருங்கள். இதற்கு தினமும் 2 மணி நேர ஒதுக்குங்கள்.
பொது அறிவுக்கு பெரும்பாலும் பள்ளி புத்தகங்களை படித்து முடித்துவிடுங்கள். கூடுதலாக நடப்பு நிகழ்வுகளை தொடர்புபடுத்தியும் படித்துக் கொள்ளுங்கள். தேர்வில் நடப்பு நிகழ்வுகளிலிருந்தும் கேள்வி வரும் என்பதால் அவற்றையும் நன்றாக படித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கூடுதலாக கிடைக்கும் நேரத்தில் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆராயுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“