TNPSC group 4 VAO exam pattern and syllabus details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான சிலபஸ் மாற்றப்பட்டுள்ளது. எனவே, தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)
இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.
அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம், இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
அ. மொழிப்பாடம்
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
ஆ. பொது அறிவு
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் தேர்வில் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தயாராகுங்கள். ஏனெனில் இந்த முறை தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், கடந்த முறையை விட இந்த முறை கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோர், சற்று குறைவாக டார்கெட் வைத்தாலே போதுமானதாக இருக்கும்.
குரூப் 4 தேர்வில் வினாக்கள் கேட்கப்படுவதைப் பொறுத்தவரை, பொது அறிவு பகுதியில், அறிவியல், அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம் பகுதிகளில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புவியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழிப் பாடப்பிரிவுக்கு, தேர்வாணையத்தின் பாடத்திட்டத்திலுள்ள தலைப்புகளுக்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். தற்போது புதிதாக யூனிட் 8 மற்றும் 9 சேர்க்கப்பட்டு, சிலபஸ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தலைப்புகளிலிருந்து கேட்கப்படும் வினாக்கள், 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாட புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை படித்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால், நேரம் இருந்தால் 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்ளலாம். மொழிப்பாடங்களே நமக்கு எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தருவன. எனவே 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக பாடங்களின் பின் பக்கம் உள்ள (புக் பேக் வினாக்கள்) வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். நாம் பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே இப்பகுதியில் 90 முதல் 95 மதிப்பெண்கள் பெறலாம்.
யூனிட் 8 மற்றும் 9 பகுதிக்கு பள்ளி பாடபுத்தங்களை படிக்க வேண்டும். கூடுதலாக சில தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் படித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 2: தற்காலிக ‘ஆன்சர் கீ’ எப்போது? ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்
அடுத்ததாக பொது அறிவு பகுதியில் 100 வினாக்களில் 75 வினாக்கள் பொது அறிவாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் இடம் பெறும். இதில் பொது அறிவு வினாக்களுக்கு, 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். இப்பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பள்ளிப் புத்தகங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பாடத்திட்டத்தின் தலைப்புகளுக்கு கூடுதலான ஆதாரங்களை தேடிப் படித்துக் கொள்ளலாம்.
நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) தேர்வு அறிவிப்புக்கு முன் ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நடப்பு நிகழ்வுகளுக்கு ஒதுக்கி படிப்பது சிறந்ததாக இருக்கும்.
அடுத்ததாக முக்கியமான பகுதியும், தேர்வர்களில் அநேகம் பேருக்கு கடினமான பகுதியாகவும் இருப்பது கணிதப் பகுதி தான். இப்பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள கணித பாடங்களை நன்கு படிக்க வேண்டும். தினமும் 1-2 மணி நேரம் ஒதுக்கி கணித பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும். தினமும் பயிற்சி பெற்றாலே கணித வினாக்களுக்கு தீர்வு காண முடியும்.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.