Advertisment

TNPSC Group 4 VAO தேர்வு; ஒரு மாதத்தில் இப்படி படித்தால்… வெற்றி உறுதி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; இன்னும் ஒரு மாதமே உள்ளது; எப்படி படிக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாதி நேரம் தமிழுக்கு ஒதுக்குங்க... TNPSC Group 4 கடைசி நேர சக்சஸ் ஸ்ட்ராட்டஜி!

TNPSC group 4 VAO exam preparation tips for aspirants: குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு! தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஒரு மாதத்தில் என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? எதை செய்யக் கூடாது போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், குறைவான நாட்களே உள்ளதால் அதற்கேற்றப்படி தயாராக வேண்டும். நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்து முடித்து விட்டீர்கள் என்றால், தற்போது அனைத்து பகுதிகளையும் திருப்பி பாருங்கள். முடிந்தவரை புதிதாக எதையும் படிக்க வேண்டாம். அப்படியே படிப்பதாக இருந்தால் அது மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும். அதுவும் சிறிய பகுதியாக இருக்க வேண்டும். நீங்கள் படித்ததை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பாருங்கள். வினாவை பார்த்த உடனே விடை தெரியும் வகையில் நீங்கள் தயாராகி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: தமிழக பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தேர்வு முறை எப்படி?

ஆன்லைனில் கிடைக்கக் கூடிய இலவச மாதிரி வினாக்களை பயிற்சி செய்து பாருங்கள். ஓவ்வொரு பாடமாக அல்லது ஓவ்வொரு வகுப்பாக மாதிரி வினாக்களை பயிற்சி செய்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியிலிருந்து எப்படி எல்லாம் வினாக்கள் கேட்கப்படுகின்றன என்பதை, பல்வேறு மாதிரி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகிக் கொள்ளுங்கள்.

அதேநேரம், நீங்கள் குரூப் 4 தேர்வுக்கு சுமாராக தான் படித்துள்ளீர்கள் அல்லது சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளீர்கள் என்றாலும், கவலைப்பட வேண்டாம். திட்டமிட்டு படித்தால் எளிதாக வெற்றி பெறலாம். புதிதாக படிப்பவர்கள் தமிழ் மற்றும் கணிதப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள். பிற பாடங்களில் புக் பேக் கொஸ்டின், முக்கிய வினாக்கள் போன்றவற்றை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் வருகிறது என்பதால், அவற்றை மட்டும் முழுமையாக, நன்றாக படித்தாலே தேர்வில் எளிதாக வெற்றிப்பெறலாம். அதேநேரம் பள்ளி பாடப்புத்தகங்களில் தேவையில்லாதவற்றை படிக்க வேண்டாம். சிலபஸ்-க்கு ஏற்றவாறு உள்ள பாடங்களை மட்டும் படித்தால் போதும். சில வகுப்பு பாடப் புத்தங்களில், குரூப் 4 தேர்வுக்கு தேவைப்படாத பாடங்களும் இடம்பெற்றிருக்கும். அவற்றைப் படித்து நேரத்தை வீண்டிக்க வேண்டாம்.

அடுத்ததாக தேர்வுக்கு, படிக்கின்ற நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதற்கேற்றாற்போல் தினமும் படியுங்கள். தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கி கொள்ளுங்கள். கணிதப் பகுதிக்கு தினமும் 1 மணி நேரத்திற்கு மேல் ஒதுக்குங்கள். மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படியுங்கள். உங்களுக்கு கடினமான பகுதிக்கு அதிக நேரம் ஒதுக்கி படியுங்கள். உங்களுக்கு எளிதாக இருக்கிற பாடங்களை திரும்ப, திரும்ப படிக்க வேண்டாம். முடிந்தவரை அதிகமான நேரத்தை படிப்பதற்கு ஒதுக்குங்கள். சும்மா வாசிப்பதாக இல்லாமல், நன்றாக புரிந்து படித்துக்கொள்ளுங்கள்.

முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. நாம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி இதுதான். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும். தமிழ் எளிமையான பகுதிதான். நமக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கக் கூடிய பகுதியும் இது தான். எனவே இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும்.

நமக்கு தேர்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, குறிப்பு எடுத்து படித்துக்கொள்ளுங்கள். ஒரு நூலாசிரியர் பற்றிய தகவல்களில் ஒவ்வொரு வகுப்பிலும், கூடுதல் தகவல்கள் இருப்பதால், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் கடைசி நேர திருப்புதலை நம்மால் எளிதாக முடிக்க முடியும். மேலும் ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்த உடனே, உங்களுக்கு நீங்களே சொல்லி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் எந்த அளவிற்கு படித்திருக்கிறீர்கள், எவ்வளவு ஞாபகம் உள்ளது என்பதெல்லாம் தெரியும்.

9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை. சிலபஸூக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். இருப்பினும், பெரும்பாலும் 90 -95 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களுக்குள் இருந்துதான் கேட்கப்படுகிறது. எனவே அதனை முழுமையாக படித்தாலே நாம் 95 வினாக்கள் வரை சரியாக விடையளித்து விடலாம்.

தமிழுக்கு அடுத்தப்படியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பகுதி வினாக்கள். இதில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதில் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம்.

பள்ளி பாடப்புத்தகங்களை படிக்கும் போது கணிதம் தொடர்பான முக்கியமான தகவல்களை படித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குரூப் 4 தேர்வில் இப்படி பாடத்திற்குள் இருந்து நேரடியாக வினாக்கள் கேட்கப்படலாம். அடுத்ததாக, பள்ளி பாட புத்தகத்தில் உள்ள வினாக்களை தவிர, கூடுதலாக பயிற்சி செய்துக் கொள்வது நல்லது. கணித வினாக்கள் பயிற்சி செய்வதை நீங்கள், படித்து சோர்வாக இருக்கும்போது செய்தால், உங்களுக்கு நேரமும் மிச்சமாகும், படிக்க வேண்டிய பாடங்களின் அளவும் குறையும். தமிழ் மற்றும் கணித பகுதி நமக்கு அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரக்கூடியவை என்பதால், இவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்.

அடுத்ததாக பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதேநேரம் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்தும் அதிக வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த இரு யூனிட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படியுங்கள். பொருளாதாரம், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், விளையாட்டு, போன்ற நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். அதேநேரம் படித்ததை திரும்ப திரும்ப ரிவிஷன் செய்தால் தான், படித்தது ஞாபகம் இருக்கும். அப்போது தான் குறைவான நாட்களிலே குரூப் 4 தேர்வில் வெல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Tnpsc Group4 Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment