TNPSC group 4 VAO exam time schedule and preparation tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இருக்கின்ற 50க்கும் குறைவான நாட்களில் எப்படி படிக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எப்படி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும்.
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
50 நாட்களில் படிப்பது எப்படி?
50 நாட்களுக்கு படிக்கின்ற நேரத்தை முதலில் அட்டவணையிட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்றாற்போல் தினமும் படியுங்கள். தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கி கொள்ளுங்கள். கணிதப் பகுதிக்கு தினமும் 1 மணி நேரத்திற்கு மேல் ஒதுக்குங்கள். மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படியுங்கள்.
முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. நாம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி இதுதான். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை கிடைப்பது கடினம். தமிழ் எளிமையான பகுதிதான். நமக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கக் கூடிய பகுதியும் இது தான். எனவே இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும்.
நமக்கு தேர்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, குறிப்பு எடுத்து படித்துக்கொள்ளுங்கள். தமிழில் முக்கியமானவற்றை அடிக்கோட்டு வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் கடைசி நேர திருப்புதலை நம்மால் எளிதாக முடிக்க முடியும். மேலும் ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்த உடனே, உங்களுக்கு நீங்களே சொல்லி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் எந்த அளவிற்கு படித்திருக்கிறீர்கள், எவ்வளவு ஞாபகம் உள்ளது என்பதெல்லாம் தெரியும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை. சிலபஸூக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். இருப்பினும், பெரும்பாலும் 90 -95 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களுக்குள் இருந்துதான் கேட்கப்படுகிறது. எனவே அதனை முழுமையாக படித்தாலே நாம் 95 வினாக்கள் வரை சரியாக விடையளித்து விடலாம்.
தமிழுக்கு அடுத்தப்படியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பகுதி வினாக்கள். இதில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதில் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம். ஆனால், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள வினாக்களை தவிர, கூடுதலாக பயிற்சி செய்துக் கொள்வது நல்லது. கணித வினாக்கள் பயிற்சி செய்வதை நீங்கள், படித்து சோர்வாக இருக்கும்போது செய்தால், உங்களுக்கு நேரமும் மிச்சமாகும், படிக்க வேண்டிய பாடங்களின் அளவும் குறையும். தமிழ் மற்றும் கணித பகுதி நமக்கு அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரக்கூடியவை என்பதால், இவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்.
இதையும் படியுங்கள்: TNTET தேர்வு; இப்படி படிங்க… ஈஸியா பாஸ் ஆகலாம்!
அடுத்ததாக பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதேநேரம் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்தும் அதிக வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த இரு யூனிட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படியுங்கள்.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். அதேநேரம் படித்ததை திரும்ப திரும்ப ரிவிஷன் செய்தால் தான், படித்தது ஞாபகம் இருக்கும். அப்போது தான் குறைவான நாட்களிலே குரூப் 4 தேர்வில் வெல்லலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.