தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!
இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பு (Group 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்களின் விவரம்
பதவியின் பெயர் | முந்தைய காலியிடங்கள் | திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள் |
கிராம நிர்வாக அலுவலர் | 274 | 425 |
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) | 3593 | 4952 |
இளநிலை உதவியாளர் (பிணையம்) | 88 | |
வரித் தண்டலர் | 50 | |
தட்டச்சர் | 2108 | 3311 |
சுருக்கெழுத்து தட்டச்சர் | 1024 | 1176 |
பண்டக காப்பாளர் | 1 | 1 |
இதுதவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம், சிறுபான்மையினர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் தொடர்பான முழுவிவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM_%207B_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
மேலும் பதவி வாரியாக, பிரிவு வாரியான (Vacancy Distribution) காலியிட விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், கடந்த குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்களை விட இந்த ஆண்டு குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.