2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12/0 நடந்த நிலையில், தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 சதவீதமாக உள்ளது.
இந்த நிலையில் தேர்வு குறித்து தேர்வர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. சிலர் தேர்வு எளிதாக இருந்ததாகக் கூற, வேறு சிலரோ சில பிரிவுகள் கடினமாக இருந்ததாகவும், நேரம் போதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பழைய வினாத்தாள்களைப் படித்தவர்களுக்குப் புதிய வினாக்களும், எதிர்பாராத மாற்றங்களும் சவாலாக அமைந்திருக்கின்றன.
புதிய வினாக்களும், மாற்றங்களும்
பல தேர்வர்கள், "ஈசியாதான் இருந்துச்சு ஆனா புதுசு புதுசா கொஸ்டின் பண்ணிருந்தாங்க. நம்ம வந்து ஓர்ல்ட் கொஸ்டின் பேப்பர் பிரிப்பேர் பண்ணிருந்தோம், அவங்க வந்து புதுசா கொஸ்டின் கொடுத்திருந்தாங்க" எனக் குறிப்பிட்டனர். குறிப்பாக, தமிழ் மற்றும் கணிதப் பிரிவுகளில் புதிய அணுகுமுறையில் வினாக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. "நிறைய தமிழ் நியூ கொஸ்டின்ஸ் தான் கேட்டிருந்தாங்க. நம்ம வந்து ஓல்ட் கொஸ்டின் பேப்பர் ஈஸியா இருந்த மாதிரி எனக்கு ஃபீல் ஆச்சு, இது வந்து கொஞ்சம் டப்தான்" என ஒரு தேர்வர் தெரிவித்தார்.
கணிதம் மற்றும் தமிழ்: ஒரு சவாலான அனுபவம்
கணிதப் பகுதி சிலருக்கு எளிதாக இருந்தாலும், பெரும்பாலானோர் அது சற்று கடினமாக இருந்ததாகக் கூறினர். "மேக்ஸ்லாம் கொஞ்சம் டப்புதான்" என்றும், "டைம் தான் சுத்தமா பத்தல, மேக்ஸ் எதுவுமே போட்டு பாக்கவே முடியல" என்றும் பலர் தெரிவித்தனர். அதேபோல், தமிழ்ப் பகுதியும் சிலருக்கு எளிதாகத் தோன்றினாலும், "தமிழில் பாதி ஈஸி, ஆனால் பாதி கஷ்டமாதான் இருந்துச்சு" என்றும், "இலக்கணம், சொற்கள் கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது" என்றும் கருத்துகள் பகிரப்பட்டன. சங்க காலங்கள் மற்றும் கூற்று-காரண வினாக்கள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொது அறிவு மற்றும் வரலாறு
பொது அறிவுப் பகுதி (GK) சிலருக்குக் கடினமாகவும், சிலருக்கு எளிதாகவும் இருந்திருக்கிறது. "ஜிகே வந்து எனக்கு கஷ்டம், ஆனால் தமிழ், மேக்ஸ்லாம் உண்மைய சொல்றது ரொம்ப ஈஸி" என ஒரு தேர்வர் கூறியிருக்கிறார். வரலாற்றைப் பொறுத்தவரை, "சோசியல் மட்டும்தான், ஹிஸ்டரி மட்டும் பார்த்து அதை படிச்சிட்டு அப்புறம் ஆன்சர் பண்ற மாதிரி இருந்துச்சு" என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
நேர நிர்வாகம்: ஒரு பெரிய தடை
பெரும்பாலான தேர்வர்களுக்கு நேரப் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, வினாத்தாள்கள் நீளமாகவும், விரிவாகவும் இருந்ததால், அவற்றை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்வதற்கே அதிக நேரம் செலவானது. "ரீட் பண்ற கொஸ்டின் வந்து ரொம்ப லென்த்தா டீடைல்டா கொடுத்துருக்காங்க, அதை ரீட் பண்றதுக்குத்தான் டைம் எடுக்குது" எனப் பலரும் ஒரே குரலில் கூறினர்.
பெற்றோர்களுக்கான கோரிக்கை
தேர்வு மையங்களில் பெற்றோர்கள் படும் சிரமங்கள் குறித்தும் தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நிற்பது, ஓய்வெடுக்க இடம் இல்லாமல் தவிப்பது போன்ற பிரச்சினைகளைக் குறிப்பிட்டனர்.
எதிர்பார்ப்புகளும், முடிவுகளும்
தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறியவர்கள், மதிப்பெண்கள் குறையலாம் என அஞ்சுகின்றனர். "ஒரு 130-135 தான் வரும், அதுக்கு மேல ஏறாது" என சிலர் கூற, வேறு சிலர் "150-க்கு மேல எடுக்கலாம்" என நம்பிக்கைத் தெரிவித்தனர். கடினமாக உழைத்தவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.