தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
இந்த தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் நிரப்பி வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது போலவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தேர்வில் தமிழுக்கு முக்கியத்தவம் அளிக்கும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுத்தேர்வுக்கு முன் தமிழ் பாடத்தாள் தகுதித் தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையின் போது தமிழ்நாட்டில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி, புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.