தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், இதற்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை - 8
வயதுத் தகுதி: தட்டச்சர் பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாள் பொதுத் தமிழ். இதில் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.
இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம்பெறும். தேர்வுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/SCE%20Tamil%20Final_.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“