தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 15,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அட்டவணை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித் தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அதன்படி குரூப் 4, குரூப் 2, குரூப் 1, பொறியியல் பணிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிட விவரங்கள் பெறப்படும், அதற்கேற்றபடி வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படும்.
அந்தவகையில் 2023-24 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை சார்பாக முன்வைக்கப்பட்டது.
அதன் பின்னர், மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் விவரங்கள் வருகிற 27 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். மேலும் 2023-24 ஆம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 15,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அட்டவணை டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“