ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு- II(இன்டர்வுயூ மற்றும் நான்-இன்டர்வுயூ ) பணிகளுக்கான முதல் நிலைதேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது
அதவாது, முன்னதாக முதல்நிலை தேர்வில் 100 பொது அறிவு 100 மொழிப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மொழி பாடத்தை ஆங்கிலம்/தமிழ் என இரண்டில் எதை வேண்டுமானலும் தேர்வர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த மொழிப் பாடத்தில் உள்ள நூறு கேள்விகள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து வந்தன. உதாரணமாக, நகர் புறத்தில் இருக்கும் மாணவர்கள் கோச்சிங் கிளாஸ் சென்று பொது அறிவில் தங்கள் மார்க்கை உயர்த்தப் பார்ப்பார்கள் . கிராம புறத்தில் இருக்கும் மாணவர்கள் போதிய வசதி இல்லாமையால் மொழி பாடத்தில் தங்கள் மார்க்கை உயர்த்த நினைப்பார்கள்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி யின் இந்த மாற்றத்திற்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலவற்றை, இங்கே பார்க்கலாம்.
வைகோ : மொழிப் பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்த மொழிப் பாட நீக்குதல் அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக கட்சித் தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனிமொழி : மக்களவை உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி "தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும். எனவே, மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
#TNPSC டிஎன்பிஎஸ்சி நடத்தும், க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். https://t.co/Rx0EYmdyfb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2019
ராமதாஸ்: பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
1. டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
— Dr S RAMADOSS (@drramadoss) September 28, 2019
2. தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள்.... தமிழ் வாழ்க!
— Dr S RAMADOSS (@drramadoss) September 28, 2019
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன்:
முதல் நிலைத்தேர்வில் முழுமையாக தமிழ்மொழி புறகணிக்கப்பட்டு 175 மதிப்பெண் பிரதான பாடங்களும் 25 மதிப்பெண் மனத்திறன் வளர்ச்சி மனக் கணக்கு உள்ளிட்டவைக்கு என 200 மதிப்பெண் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.
முதன்மைத் தேர்வில் தமிழ்மொழி வளர்ச்சி பண்பாடு கலாச்சாரம் திருக்குறளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவையினை மகிழ்ச்சியோடு வரவேற்றாலும் முதல்நிலைத்தேர்வில் வெற்றிப்பெற்றால் தானே முதன்மைத்தேர்விற்கு செல்லமுடியும்.
எனவே, இந்த அறிவிப்பை உடனே தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி (MLA): இத்தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம், தமிழே தெரியாமல் ஒருவர் தமிழக அரசுப் பணியில் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ரயில் துறை, வங்கித்துறை, அஞ்சல் துறை என பலவற்றில் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் பெருகி விட்ட சூழலில், இது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது.
எனவே தமிழக அரசு இம்முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.