கடந்த 2022 முதல் 2024 வரை நடத்தப்பட்ட 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் குறிப்பிட்ட காலம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட செயல் அலுவலர் – கிரேடு-3 தேர்வு ( குரூப் 7பி), செயல் அலுவலர் - கிரேடு-4 தேர்வு (குரூப் 8), கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 3ஏ), ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு மற்றும் கடந்த 2024 ஆம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஆகிய 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களின் ஒருமுறை பதிவெண் மூலம் ஓ.எ.ம்ஆர் விடைத்தாளினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.