தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டெட் தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர். டெட் தேர்வின் முதல் தாளை 1.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வு (TNTET Exam) 14.10.2022 முதல் 19.10.2022 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெற இந்த தேர்வை எழுதுவது கட்டாயமாகும்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: தவாங் மோதல், திருமண பலாத்காரம் உள்ளிட்ட முக்கிய சில டாபிக்ஸ் இங்கே!
ஆசிரியர் வாரியம் நடத்திய இத்தேர்வில் 1,53,023 பேர் கலந்துக் கொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட டெட் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, கடந்த 22 ஆம் தேதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் 3 மாதங்களுக்குள் (மார்ச் 22) தேர்ச்சி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெட் தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்ணும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண் பெற வேண்டும்.
ஆனால், டெட் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் எவ்வளவு போன்ற விவரங்கள் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேநேரம், டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பார்க்கும்போது, மொத்த தேர்வாளர்களில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது 14 சதவீதம் ஆகும். எஞ்சிய 86 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை, என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil