TNUSRB announce Tamil paper is mandatory for police exam: காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காலவராக முடியும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காவல்துறை பணியிடங்களுக்கு தனி மவுசு தான். பெரும்பாலான இளைஞர்களுக்கு காக்கிச்சட்டை போட வேண்டும் என்பது தான் கனவு. விரைவில் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காவலர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் உள்ள காலியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், போட்டி தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தமிழக காவல் துறையில் நிலவும் காவலர் பற்றாக்குறை காரணமாக, அந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்தநிலையில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவலர் தேர்வில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காவலராக முடியும்.
காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காவலராக பணிக்கான எழுத்து தேர்வு மதிப்பிடப்படும்.
இதனால் காவலர் பணிக்கான தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் 2 ஆம் தாள் வழக்கமான முறையில் நடைபெறும். அதாவது பொது அறிவு பகுதியில் 50 வினாக்களும், உளவியல் பிரிவில் 30 வினாக்களும் கேட்கப்படும்.
முன்னதாக, தமிழகத்தில் அரசுப்பணிகளில் சேர தமிழ் மொழி தெரிந்திருப்பது கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என்றும் அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், காவலர் தகுதித் தேர்வில் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே காவலர் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தினை தெரிந்துக் கொண்டு, அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil