போலீஸ், சிறைத்துறை தேர்வு நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

பின், எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2 ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வேலூரில் மாவட்டத்தில் 1019  பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் இருந்து ‘(சிகரம்’ என்ற பயிற்சி மையத்தில்) படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாலும், இது தொடர்பாக மாநில காவலர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் அளிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியார்கள் தேர்விலும் முறைகேடு நடப்பதாகவும், இதனால் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் வேதனை தெரிவித்தார். குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள் என்றும், அவர்கள் அனைவரும் எப்படி 69.5 ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள் என்றும்,  எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேரை எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள் என அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்..

இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  தமிழர்கள் ஆகிய நாம் நம்முடைய நேர்மையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

கிராம புற மக்கள் அரசு வேலையை பெரிய விஷயமாக நினைப்பதாகவும், ஆனால் இது போன்ற சில விரும்பாதகாத நிகழ்வுகள் மூலம் அவர்களின் எண்ணம் மாறும் என தெரிவித்தார்.

இதனையடுத்து,  தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, மனு குறித்து மார்ச் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வு நடைமுறைகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close