பொதுவாக இன்ஜினியரிங் என்று சொன்னாலும், அதிலிருந்து பி.ஆர்க் வேறுபட்டது. இதற்கென தனி நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்நிலையில் பி.ஆர்க் படிப்புக்கான (NATA) நாட்டா நுழைவுத்தேர்வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 ஆண்டுகால படிப்பு ஒரு வருட இண்டர்ன்ஷிப் என மொத்தம் 5 ஆண்டுகளைக் கொண்டது இந்த பி.ஆர்க். நாட்டா எனப்படும் தேசிய கட்டிடக்கலை மற்றும் திறனறிதல் தேர்வு மூலம், இந்தப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்திய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் இதுவரை இந்தத் தகுதி தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வந்தது. ஆனால் இனி இத்தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் 2019-ம் கல்வியாண்டிற்கான பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடைபெறும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், பி.ஆர்க் படிப்பில் சேர முடியும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 24-ம் தேதியே தொடங்கி விட்டது. 12-ம் வகுப்பில் கணிதப் பாடத்துடன் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர்கள் இந்த பி.ஆர்க் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நாட்டா தேர்வுக்கு வரும் மார்ச் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விரும்புபவர்கள் இதற்கான விண்ணப்பக் கட்டணமாக, ரூ.1800 செலுத்த வேண்டும். அடுத்து வரும் இரண்டாவது தேர்வையும் எழுத விரும்புவோம் ரூ.3500 கட்ட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஒரு தேர்வுக்கு ரூ.1500-ம், இரண்டு தேர்வையும் எழுத விரும்புபவர்கள் ரூ.2800-ம் செலுத்த வேண்டும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர் என ஆறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதன் முதல் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை ஏப்ரல் 13-ம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். இதன் முடிவுகள் மே 3-ம் தேதி வெளியாகும்.
இதனைத் தொடர்ந்து நாட்டாவின் இரண்டாவது தேர்வு ஜூலை 7-ம் தேதி நடக்கிறது. இதற்கு ஜனவரி 24-ம் தேதியிலிருந்து ஜூன் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதன் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்படும்.
இதன் முழு விபரங்களை www.nata.in என்ற இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.