Courses After 12th in 2019: பிளஸ் டூ-வுக்குப் பிறகு படிக்க டாப் 10 கோர்ஸ்கள்!

பிளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் என சில ஐடியாக்களைத் தருகிறோம். 

Top 10 Courses for Class 12th in 2019: தமிழகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது.

இதில் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். 12-ம் வகுப்பு படிக்கும் போதே அடுத்து என்ன படிப்பது என பெரும்பாலானோர் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சிலர் தேர்வு முடிவைப் பொறுத்து கல்லூரி படிப்பை முடிவு செய்வார்கள். இன்னும் சிலர் அதுவா இதுவா என குழப்பத்தில் இருப்பார்கள்.

அப்படியானவர்களுக்கு பிளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் என சில ஐடியாக்களைத் தருகிறோம்.

மருத்துவம் 

பிளஸ் டூ-வில் உயிரியல் பிரிவை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் பலரும் மருத்துவத்துறையில் பயணிக்க விரும்புவார்கள். நீட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து இதற்கான இடம் கிடைக்கும். ஆங்கில மருத்துவத்தில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வெட்னரி சயின்ஸ் ஆகிய படிப்புகளும் மாற்று மருத்துவத்தில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி உள்ளிட்ட படிப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

விவசாயம்

தற்போதைய சூழலில் விவசாயத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது என சொல்லலாம். இதில் கால காலமாக புகழ்பெற்று விளங்குவது பி.எஸ்.சி (அக்ரி) என்கிற நான்கு வருடப் பட்டப் படிப்பாகும். தவிர, பி.எஸ்.சி (விவசாயம்) எனும் தோட்டக் கலைப் படிப்பு, பி.எஸ்.சி மனையியல் படிப்பு மற்றும் வனத்துறை சார்ந்த படிப்புகளும் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் உள்ளன.

பொறியியல் 

பொறியியலுக்கான வரவேற்பு குறைகிறது எனக் கூறப்பட்டாலும், சரியான கோர்ஸை தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலம் பிரகாசிக்கும். கட்டிடக்கலை, மெரைன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் உள்ளிட்ட படிப்புகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சி.இ.ஜி எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி, எஸ்.ஏ.பி எனப்படும் ஆர்க்டெக்சர் கல்லூரி ஆகிய நான்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி கல்லூரிகள். அடுத்த நிலையில் மாநிலத்தின் 13 இடங்களில் அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும். 10 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.

சட்டம்

சட்டம் பயில விரும்புபவர்களுக்கு தேசிய அளவில் புகழ்பெற்ற அகில இந்திய சட்டக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. இவற்றுள் டி.என்.என்.எல்.எஸ் எனப்படும் தமிழ்நாடு தேசிய சட்ட கல்லூரி திருச்சியில் செயல்படுகிறது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப் படிப்பு சேர CLAT எனப்படும் பொது சட்ட நுவுத் தேர்வினை எழுத வேண்டும். ஆனால் தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது.

வணிகம்

கம்ப்யூட்டர் பயிற்சியோடு இணைந்த பி.காம் (கணினி அறிவியல்) மற்றும் பி.காம் (தகவல் தொழில்நுட்பம் ), வங்கித்துறை சார்ந்த (வங்கி மேலாண்மை) மற்றும் பி.காம் (சந்தைபடுத்துதல்), பி.காம் (விளம்பரவியல்) போன்ற படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலான கலைக்கல்லூரிகளில் இந்த பாடப்பிரிவுகள் இடம் பெற்றிருக்கும்.

கேட்டரிங்

ஆண்கள் பெண்கள் என இருபாலருமே சமையல் சார்ந்த படிப்புகளைப் படிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னை தரமணியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெறும் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பு உள்ளது. இதில் சேர அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவிர, மாநில அரசு நடத்தும் கேட்டரிங் காலேஜ் திருச்சியில் உள்ளது. இவை இரண்டிலுமே உணவு தயாரிப்பு, அலுவல் பணி, மேலாண்மை, நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்றரை வருட டிப்ளமா படிப்புகள் உள்ளன.

ஊடகம்

இன்ஜினியரிங் படித்தவர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது ஊடகத்துறை. பத்திரிக்கை, நாளிதழ், டி.வி, ரேடியோ ஆகியவற்றைத் தாண்டி இன்றைய தலைமுறையில் நியூ மீடியா எனப்படும் ஆன்லைன் ஊடகங்கள் பெருமளவில் முளைத்துள்ளன. படிக்கும் போதே ஆன்லைன் செய்தித்தளம், யூ-ட்யூப் சேனல் என கலக்கி வருகிறார்கள் மாணவர்கள்.

ஊடகத் துறையைப் பொறுத்தவரை பி.எஸ்சி (விஷுவல் கம்யூனிகேசன்) விஸ்காம், பி.எஸ்.சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்.சி (அனிமேஷன்), (பிலிம் மற்றும் டிவி புரடொக்ஷன்), பி.ஏ. (ஜர்னலிஷம்) ஆகியவைகள் முக்கியமான படிப்புகள்.

சாட்டர்டு அக்கவுண்ட்

அக்கவுண்ட்ஸ் பாடத்தில் நாட்டமுள்ளவர்கள் சாட்டர்டு அக்கவுண்ட் படிக்கலாம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா-வில் மூன்று முதல் 5 வரையிலான சி.ஏ கோர்ஸ்கள் இருக்கின்றன.

ஃபார்மஸி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஃபார்மஸி சம்பந்தமான படிப்புகளை முடித்துவிட்டு 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியில் வருகிறார்கள். இதற்கு தமிழகத்தில் நிறைய பார்மஸி கல்லூரிகள் உள்ளன.

ஃபைன் ஆர்ட்ஸ்

கலை மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்கள், பேச்சுலர் ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் என்னும் 4 வருட பி.எஃப்.ஏ பட்டப்படிப்பு சென்னை எழும்பூரிலுள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஓவியக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியிலும் உள்ளது. துணி அலங்காரம், செராமிக் வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, ஓவியம் என பல சிறப்புப் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பை சொல்லித் தரும் இந்த கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் மிகக் குறைவு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close