12 ஆம் வகுப்புக்குப் பிறகும் இந்திய மாணவர்களின் கல்வித் தேவைகளில் பொறியியல் படிப்பு பல தசாப்தங்களாக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்து பொறியியல் துறைகளிலும், தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் தேவை காரணமாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்தியாவில் உள்ள முதன்மையான பொறியியல் நிறுவனங்களில் நுழைவதற்கான முதன்மை வழிகளில் ஒன்று கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) ஆகும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜே.இ.இ முதன்மை 2024 தேர்வில் மொத்தம் 14,15,110 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். 2025 ஆம் ஆண்டில், ஜனவரி அமர்வில் 13,11,544 பேர் பதிவு செய்தனர், 12,58,136 பேர் தேர்வு எழுதினர். ஏப்ரல் 2025 அமர்வில் 10,61,840 பேர் பதிவு செய்தனர் மற்றும் 9,92,350 பேர் தேர்வு எழுதினர்.
பொறியியல் ஆர்வலர்களுக்கான சிறந்த தேர்வுகளில், தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) அடங்கும். குறிப்பாக ஐ.ஐ.டி சென்னை, என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசையின் கீழ் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பொறியியல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் (NIRF 2024 - பொறியியல் பிரிவு)
/indian-express-tamil/media/post_attachments/33ababe7-e08.jpg)
ஐ.ஐ.டி சென்னை: கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
ஐ.ஐ.டி சென்னை தனது கணினி அறிவியல் பிரிவை 1973 ஆம் ஆண்டு ஐ.பி.எம் 370 கணினி அமைப்புடன் கணினி மையமாக நிறுவியது. இது 1983 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பி.டெக் படிப்பை வழங்கத் தொடங்கியது. இன்று, இந்தத் துறையில் சுமார் 700 மாணவர்கள் உள்ளனர், அவர்களில் 60% க்கும் அதிகமானோர் முதுகலை படிப்பைத் தொடர்கின்றனர். இந்தத் துறை தொழில்துறை நிதியுதவி அளிக்கும் பெல்லோஷிப்கள் மூலம் பி.எச்.டி மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.
வேலைவாய்ப்பு அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி சென்னையில் கணினி அறிவியலில் பி.டெக் படிப்பிற்கான மீடியன் சம்பளம் மற்றும் ஆவரேஜ் ஆண்டு சம்பள தொகுப்பு முறையே ரூ.37.50 லட்சமாகவும் ரூ.52.32 லட்சமாகவும் இருந்தது. இரட்டை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, இந்த சம்பள தொகுப்பு இன்னும் அதிகமாக இருந்தன, மீடியன் மற்றும் ஆவரேஜ் தொகுப்புகள் இரண்டும் ஆண்டுக்கு ரூ.84 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி டெல்லி - கணினி அறிவியல்
1982 இல் நிறுவப்பட்ட ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஒரு முக்கிய ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக வளர்ந்துள்ளது. இது தரவு கட்டமைப்புகள் & வழிமுறைகள், தனித்துவமான கணித கட்டமைப்புகள், டிஜிட்டல் லாஜிக் & சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் கணினி கட்டமைப்பு போன்ற இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
வேலைவாய்ப்புகளில், ஐ.ஐ.டி டெல்லியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் மைக்ரோசாப்ட் இந்தியா (ஆர் & டி), சாம்சங் ஆர் & டி நொய்டா, ஐ.பி.எம், எச்.சி.எல் டெக், மைக்ரான், டைம்லர் டிரக்ஸ் மற்றும் குவாண்டம் ஸ்ட்ரீட் ஏ.ஐ போன்ற முக்கிய நிறுவனங்களிடமிருந்து சலுகைகளைப் பெற்றனர்.
ஐ.ஐ.டி பாம்பே – கணினி அறிவியல்
ஐ.ஐ.டி பாம்பேயில் கணினி நடவடிக்கைகள் 1967 ஆம் ஆண்டு மின்ஸ்க் II கணினியுடன் தொடங்கியது. இன்று, இங்குள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை நாட்டில் மிகவும் விரும்பப்படும் துறைகளில் ஒன்றாகும்.
கடந்த ஜே.இ.இ அமர்வில், ஐ.ஐ.டி.,களுக்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஐ.ஐ.டி பாம்பே முதலிடத்தில் இருந்தது. முதல் 1,000 தரவரிசை பெற்றவர்களில் பலர் தங்கள் இளங்கலைப் படிப்புகளுக்கு ஐ.ஐ.டி பாம்பேவைத் தேர்ந்தெடுத்ததாகக் காட்டும் தரவுகளை நிறுவனம் பகிர்ந்து கொண்டது.
2023–24 வேலைவாய்ப்பு பருவத்தில், கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த 275 மாணவர்கள் பதிவு செய்தனர், 254 பேர் பங்கேற்றனர், 230 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இது கணினி அறிவியல் பிரிவில் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு விகிதத்தைக் குறிக்கிறது.
ஐ.ஐ.டி கான்பூர் - கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
ஐ.ஐ.டி கான்பூர் 1963 இல் ஐ.பி.எம் (IBM) 1620 அமைப்புடன் கணினி கல்வியைத் தொடங்கியது. 1964 முதல் 1975 வரை, இந்த நிறுவனம் நிரலாக்கத்தில் சுமார் 30 குறுகிய படிப்புகளை நடத்தியது, இது இந்தியாவில் கணினி அறிவியல் கல்விக்கான அடித்தளத்தை அமைத்தது.
டிசம்பர் 2024 இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஐ.ஐ.டி கான்பூர் 2024–25 வேலைவாய்ப்பு பருவத்தின் முதல் கட்டத்தை மொத்தம் 28 சர்வதேச சலுகைகளுடன் நிறைவு செய்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 27% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட், குவால்காம், இன்டெல், ஆரக்கிள், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், டேட்டாபிரிக்ஸ், ரிலையன்ஸ் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் இதில் அடங்கும்.
ஐ.ஐ.டி கரக்பூர் – கணினி அறிவியல் துறை
ஐ.ஐ.டி கரக்பூரில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை 1980 இல் நிறுவப்பட்டது, அதன் முதல் பி.டெக் தொகுதி 1982 இல் பட்டம் பெற்றது. தற்போது, இந்தத் துறையில் சுமார் 650 இளங்கலை மாணவர்கள், 160 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 175 ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளனர். அதன் ஆராய்ச்சி AI/ML, கிரிப்டோகிராஃபி, பேச்சு செயலாக்கம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் போன்ற துறைகளில் பரவியுள்ளது.
சமீபத்திய வேலைவாய்ப்பு பருவத்தில், ஐ.ஐ.டி கரக்பூர் 409 பி.பி.ஓ.,க்கள் (PPO) மற்றும் 25 சர்வதேச வேலைவாய்ப்புகள் உட்பட 1,800 சலுகைகளைப் பெற்றது. ஒன்பது மாணவர்கள் ரூ.1 கோடிக்கு மேல் சலுகைகளைப் பெற்றனர், அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.2.14 கோடி. இந்த சலுகைகள் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து வந்தன, இது கணினி அறிவியல் துறையுடன் வலுவான தொழில்துறை ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.