Top Government Engineering colleges list in Tamilnadu: பொறியியல் படிக்க விரும்பும் மாணவரா? உங்களுக்கான முக்கிய தகவல் இங்கே. எந்த கல்லூரியில் படிக்கலாம், எந்த கோர்ஸ் படிக்கலாம் உள்ளிட்ட தகவல்களுடன் தமிழகத்தின் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்க்கை அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களின் சமீபத்திய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் காரணமாக பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் கணினி அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.
இதையும் படியுங்கள்: பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் எவ்வளவு?
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் குறையும் என்றாலும், முக்கியமான கல்லூரிகளில் கணினி அறிவியல் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது? எந்த கோர்ஸ் படிக்கலாம்? எந்தக் கல்லூரி சிறந்த கல்வித் தரத்தை பேணுகிறது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். இதில் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளிட்டவற்றின் விவரங்களைப் பார்க்கலாம்.
இது தொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருக்கும். பொறியியலைப் பொறுத்தவரை மாணவர்களின் உச்சபட்ச விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) தான். அடுத்ததாக எம்.ஐ.டி கேம்பஸ் (மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி) உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியும், மதுரை தியாகராஜா அரசு பொறியியல் கல்லூரியும் உள்ளன.
அடுத்தப்படியாக கோயம்புத்தூர் சி.ஐ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி) கல்லூரியும், ஜி.சி.டி (அரசு தொழில்நுட்ப கல்லூரி) கல்லூரியும் மாணவர்களின் டாப் விருப்ப தேர்வாக உள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக மாணவர்கள் தேர்ந்தெடுப்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் (அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, சென்னை) கல்லூரி உள்ளது. இங்கு மாணவர்கள் கெமிக்கல், லெதர், டெக்ஸ்டைல் உள்ளிட்ட படிப்புகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆனால் கெமிக்கல் படிப்புகளை எல்ட்ரோ-கெமிக்கல் படிப்புகளுக்கு போட்டி கடுமையானதாக இருக்கிறது. காரைக்குடி சிக்ரி (செண்ட்ரல் இன்ஸ்டியூட் ஆஃப் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச்) இந்த படிப்பில் முதன்மை கல்லூரியாக இருக்கிறது.
அடுத்ததாக, அரசுப் பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை மாணவர்களின் விருப்பமான கல்லூரிகளாக இருக்கிறது.
அடுத்தப்படியாக, காரைக்குடி அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. மேலும், தந்தை பெரியார் கல்லூரி வேலூர், திருச்சி அரசு பொறியியல் கல்லூரி ஆகியவையும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இதேபோல் திருநெல்வேலி மற்றும் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிகளும் முன்னிலையில் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்களைப் பொறுத்தவரை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி ஆகிய வளாகங்கள் முன்னனி விருப்பங்களாக உள்ளன. அடுத்து தேனி மற்றும் தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் விருப்ப பட்டியலில் உள்ளன, என ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
மேலும், இந்தக் கல்லூரிகளை எல்லாம் மாணவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். இது தவிர உள்ள பிற பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தற்போது அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த கல்லூரிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அந்த கல்லூரிகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துக் கொண்டு, நீங்கள் திருப்தி அடைந்தால் சேர்க்கை பெறலாம், என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் காஞ்சிபுரம் கல்லூரி முன்னிலையில் உள்ளது. அடுத்தப்படியாக, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஆரணி, திண்டிவனம், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், இராமநாதபுரம், பட்டுக்கோட்டை போன்றவை மாணவர்களின் இரண்டாம் கட்ட விருப்ப தேர்வுகளாகவே உள்ளன, எனவே அவற்றை பற்றி நன்றாக அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், என்றும் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
அடுத்தப்படியாக, அரசு அல்லது தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த கல்லூரிகளின் வேலைவாய்ப்பு திறன், அதாவது கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் அதிகப்பட்ச சம்பள அளவைப் பொறுத்து, அந்தக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், இவ்வாறு அந்த வீடியோவில் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil