12 ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்பது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய கேள்வி. சிலர் மருத்துவ துறையை தேர்வு செய்யலாம், சிலர் பொறியியல் அல்லது கலை அறிவியல் படிப்புகளை தேர்வு செய்யலாம். இவற்றில் மருத்துவப் படிப்புகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.
12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்களை படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவத் துறையாகத் தான் உள்ளது. இந்த நிலையில் மருத்துவப் படிப்புகளில் டாப் படிப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
சிறந்த மருத்துவ படிப்புகள்
MBBS (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை)
மருத்துவம் படிக்க விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வு எம்.பி.பி.எஸ் படிப்பு தான். இந்த 5.5 வருட இளங்கலைப் பட்டப்படிப்பில் ப்ரீ-கிளினிக்கல், பாரா-கிளினிக்கல் மற்றும் கிளினிக்கல் பாடங்கள் அடங்கும். இந்தியாவில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதுவதிலிருந்து இதற்கான முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்ளலாம்.
BDS (இளங்கலை பல் அறுவை சிகிச்சை)
எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அடுத்தப்படியாக அனைவரும் விரும்புபவது பல் மருத்துவ படிப்பு தான். 5 ஆண்டு கால படிப்பில் மாணவர்கள் தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறை பல் அறுவை சிகிச்சை பயிற்சி இரண்டையும் பெறுகிறார்கள். பி.டி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டது.
BSMS (இளங்கலை சித்தா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை)
தமிழகத்தில் வழங்கப்படும் சித்த மருத்துவப் படிப்பு ஆயுஷ் படிப்புகளின் கீழ் வருகிறது. 5.5 ஆண்டு கால சித்தா படிப்புக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
BAMS (இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை)
இந்தியாவில் ஆயுர்வேதா படிப்புகள் ஆயுஷ் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த 5.5 ஆண்டு இளங்கலைப் படிப்பு மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவர் ஆவதற்கு பயிற்சி அளிக்கிறது. மனித நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய ஆய்வுகள் இந்த திட்டத்தில் அடங்கும். நீட் தேர்வு மூலம் பி.ஏ.எம்.எஸ் சேர்க்கை நடத்தப்படுகிறது.
BHMS (இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை)
ஹோமியோபதி படிப்பும் ஆயுஷ் பாடத்திட்டத்தின் கீழ் வருகிறது. பட்டதாரிகள் ஹோமியோபதி மருத்துவர்களாக பணியாற்றலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களும், நல்ல நீட் மதிப்பெண்ணும் தேவை.
BPT (இளங்கலை பிசியோதெரபி)
பிசியோதெரபிஸ்ட் ஆக விரும்பும் மாணவர்கள், ஆறு மாத இன்டர்ன்ஷிப்பை உள்ளடக்கிய 4.5 ஆண்டு படிப்பான பி.பி.டி.,யை தொடரலாம். நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இவை தவிர, இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.