/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-13T112348.948.jpg)
தமிழகத்தில் 2582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,582 ஆசிரியர் பணியிடங்களுக்கு 41,485 விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்றது.
தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கும் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் பிப்ரவரி 19 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைக்குறிப்பு தொடர்பாக தேர்வர்கள் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை தங்கள் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.