தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) என்ற பெயரில் 47 பக்க போலி அறிவிப்பு சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவியது. இது பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளாலும் பரவலாகப் பகிரப்பட்டது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: கிர்கிஸ்தானில் MBBS படிக்க ஆசையா? தகுதி, கட்டணம், கல்லூரிகள், உதவித்தொகை விவரங்கள்
கையொப்பமிடாத அறிவிப்பில், “2023-2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மே 14 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே கோரப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும், கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விரிவான பட்டியலும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது.
ஆனால், உயர்கல்வித்துறை செயலர் டி.கார்த்திகேயன் அந்தத் துறையால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும், “ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட சில வாரங்கள் ஆகும்,” என்றும் அவர் கூறினார். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த போலி அறிவிப்பு தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil