பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு 41,485 விண்ணப்பித்து இருந்தனர். ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர்.
ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்தநிலையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (பிப்ரவரி 4) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 130 மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 41,485 பேர் எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வறைக்குச் செல்லும் போது உங்கள் அனுமதி அட்டை என்ற ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு அரை மணி முன்னதாக சென்று, உங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்ளுங்கள்.
கடைசி நாளில் நீங்கள் இதுவரை படித்த டாபிக்ஸ்களின் தகவல்களை நம்பிக்கையோடு மனதில் வைத்து தேர்வுக்கு செல்லுங்கள். இன்னும் சிலவற்றை படிக்கவில்லையே என கவலைப்பட வேண்டாம். குறைவாக படித்திருக்கிறோம் என நினைத்து தேர்வு எழுத செல்லாமல் இருக்க வேண்டாம்.
ஒரு கேள்விக்கு விடையளிக்கும்போது நான்கில் முதலில் எந்த பதில் உங்களுக்கு சரியென்று தோன்றுகிறதோ அதனை விடையாக தேர்வு செய்யுங்கள். கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை வாசித்து, புரிந்துக் கொண்டபின்னர் விடையளியுங்கள். விடையளிக்கும் முன் கேள்வி எண் மற்றும் பதிலை சரிபார்த்து விடையளியுங்கள். தமிழ் மொழித் தகுதித் தேர்வு எளிதாக இருக்கும். நீங்கள் படித்தவற்றில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். எனவே தைரியமாக தேர்வை எதிர்கொள்ளுங்கள் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“