பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று (பிப்ரவரி 4) நடைபெற்று உள்ள நிலையில், தமிழ் மொழித் தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தமிழகம் முழுவதும் 130 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் 40000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இரண்டாவது பகுதி முதன்மை பாடப் பகுதி. இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம். இல்லையெனில் முதன்மை பாடப் பகுதி மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
இந்தநிலையில், இன்று நடந்த தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மொழித் தகுதித் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இதில் 20 மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். இன்றைய தேர்வில் 2 மதிப்பெண் கேள்விகள் 20ம், ஒரு மதிப்பெண் கேள்விகள் 10ம் கேட்கப்பட்டன.
இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். தமிழ் மொழித் தகுதித் தேர்வு என்பது, பிற மொழி பேசுபவர்கள் சிறிதும் தமிழ் தெரியாமல் பணியில் சேரக் கூடாது என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே தேர்வில் இலக்கணம் சார்ந்து எளிமையாக வினாக்கள் இடம் பெறும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. தமிழ் மொழித் தகுதித் தேர்வே போட்டித் தேர்வு அளவிற்கு இருந்தது என்று தேர்வர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முதன்மை பாடப் பகுதியைப் பொறுத்த வரை ஆவரேஜ் அளவில் இருந்தது. பாதி கேள்விகள் நேரடியாக விடையளிக்க கூடியதாகவும், பாதி கேள்விகள் புரிந்துக் கொண்டு விடையளிக்கும் வகையில் மறைமுகமாகவும் இருந்தது என்று தேர்வர்கள் கூறினர்.
பொதுவாக இதுபோன்ற தேர்வுகளுக்கு தயாராகும்போது தேர்வர்கள் தங்கள் முதன்மை பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். ஏனெனில் அந்த பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்களே வேலையை பெற்றுத் தரும். தமிழ் தகுதித் தேர்வை பொறுத்தவரை மேலோட்டமாக கேள்விகள் இருக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், கேள்விகள் கடினமாக இருந்ததால், முதன்மை பாடத்தில் நன்றாக விடையளித்தவர்கள் கூட தேர்ச்சி பெற முடியாமல் போகும் சூழ்நிலை உள்ளது என்று தேர்வர்கள் கவலை கூறுகின்றனர்.
இந்தத் தேர்வு விரிவான வகையில் விடையளிக்கும் எழுத்துத் தேர்வு போல் அல்லாமல், சரியான விடைகளை தேர்வு செய்து குறிக்கும் கொள்குறி வகை தேர்வாக, ஓ.எம்.ஆர் தாள் மூலம் நடைபெற்றுள்ளது. எனவே, முதன்மை பாடத்தில் நன்றாக விடையளித்து, தமிழில் 19 மதிப்பெண் எடுத்தால், அந்த தேர்வருக்கு ஆசிரியர் பணி கிடைக்காது. ஒரு தகுதி தேர்வுக்கு இவ்வளவு கடினமாக கேள்விகள் கேட்டிருப்பது எதிர்பாராதது, இதனால் எங்கள் ஆசிரியர் கனவு கேள்விக்குரியாகி உள்ளது என்றும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.