இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான நியமனத் தேர்வுக்கு 26000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 15 ஆம் தேதி முடிவடைந்தது, ஆனால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“