தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூடத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அரசு தொடக்க, ஒன்றிய மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்த நியமனத் தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கான தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் பணிகளில் கூடுதலாக 1000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நியமனத் தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2768 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் நியமனத் தேர்வுக்கான தேர்வறை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குத் தேர்வு மையங்களுக்குக் கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிரப் பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்குப் பின்னர் வரும் தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஹால் டிக்கெட் உடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், பான் கார்டு போன்ற அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
தேர்வர்கள் கைப்பேசி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களைத் தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
பெல்ட், நகைகள், ஷூ, ஹீல்ஸ் ஆகியவை அணிந்து வரக் கூடாது.
தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுதத் தடை விதிக்கப்படும்.
/indian-express-tamil/media/post_attachments/e07eb116-8e2.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“