தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அரசு தொடக்க, ஒன்றிய மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்த நியமனத் தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கான தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இடைநிலை ஆசிரியர் பணிகளில் கூடுதலாக 1000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நியமனத் தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2768 ஆக உயர்ந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுத 26510 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு கடினமாக இருந்தாக தேர்வர்கள் கூறுகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் சற்று எளிதாக இருந்ததாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
கணிதப் பாடத்தில் வடிவியல் பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அறிவியல் பாடத்தில் பெரும்பாலான வினாக்கள் வேதியியல் பகுதியில் இருந்து வந்தன. சமூக அறிவியலைப் பொறுத்தவரை புவியியல் பகுதியில் அதிக கேள்வி கேட்கப்பட்டிருந்தன என்று தேர்வர்கள் கூறுகின்றனர்.
சில கேள்விகள் பள்ளி மட்டத்தில் இல்லாமல், கல்லூரி அளவில் இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். சில தேர்வர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வை விட, இடைநிலை ஆசிரியர் தேர்வில் சில கடினமான கேள்விகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர். சில தேர்வர்கள் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படும் தேர்வு போல இருந்ததாகவும் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“