க.சண்முகவடிவேல்
School Exam: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் வருகிற 22 ஆம் தேதி வரையில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின்போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,225 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
மேலும், இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், சுமார் 3,302 மையங்களில், 7.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 1,135 பறக்கும் படையினரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள் சிறைச்சாலை தேர்வு மையம் 1. ஆக மொத்தம் 130 தேர்வு மையங்களிலும் 13,603 மாணவர்களும் 16.400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 4.03.2024 முதல் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதில் 15,211 மாணவர்களும், 17,102 மாணவிகளும் ஆக மொத்தம் 32,313 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 276 சொல்வதை எழுதுபவரும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 185 சொல்வதை எழுதுபவர்கள், 250 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 1600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி வருவாய் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு மொத்தம் 9 தேர்வு மையங்களும் 11 ஆம் ஆண்டு 7 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையிலேயே சிறைக்கைதிகளுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு மேல்நிலை 11 வகுப்பிற்கு 35 சிறை தேர்வர்களும், 12 ஆம் வகுப்பில் 9 சிறை தேர்வர்களும் ஆக மொத்தம் 44 சிறை தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மேல்நிலை தேர்விற்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் ஆக மொத்தம் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 34 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருச்சியில் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக தத்தம் பெற்றோர்களிடம் ஆசி வாங்கியும், கோவிலில் வழிபாடும் செய்தும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.