மழை வெள்ளம் மற்றும் நிர்வாக காரணங்களால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 130 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. திருச்சியைச் சுற்றியுள்ள டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் முக்கிய காரணம்.
இதனிடையே பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. மேலும் அதன் விளைவாக வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த மழை வெள்ள பாதிப்பு காரணமாகவும், நிர்வாக காரணங்களாலும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) அதன் தொடர்புடைய கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
முன்னதாக தேர்வு டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16, 2023 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளமான https://www.bdu.ac.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம்.
“துணைவேந்தரின் உத்தரவின்படி, 11-12-2023 முதல் 16-12-2023 வரை இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டத்திற்கான பருவத் தேர்வுகள் நிர்வாக காரணங்கள் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஒத்திவைக்கப்பட்ட தேதிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“