தமிழகத்தின் மத்திய பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பேருதவியாக இருக்கிறது. அப்பகுதியிலுள்ள கடைகோடி கிராமத்தைச் சேர்ந்த பலரும், தங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக வருவதற்கு இப்பல்கலைக்கழகம் முக்கிய காரணம். இப்பல்கலைக்கழகம் உருவாக்கிய முதல் தலைமுறை மாணவர்கள் ஆயிரமாயிரம்.
இதையும் படியுங்கள்: CBSE Exams; சி.பி.எஸ்.இ மாதிரி தேர்வுத் தாள் வெளியீடு; புதிய மதிப்பெண் முறை என்ன?
இவ்வாறு பட்டம் முடிக்கும் மாணவர்கள், தாங்கள் பயின்ற கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்ததற்கான சான்றிதழ்களை பெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இறுதியாண்டு படிப்பின் போதே பட்ட சான்றிதழுக்கான தொகையை செலுத்துவதுடன், பட்டமளிப்பு விழாவிற்காகவும் கட்டணத் தொகையை மாணவர்கள் சேர்த்து செலுத்துவார்கள். பல்கலைக்கழகத்திலும் நேரடியாக சிலர் கட்டணத்தை செலுத்துவர். பல்கலைக்கழகத்தின் தரப்பிலிருந்து பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்திலும், நாளிதழ்கள் வாயிலாகவும் வெளியிடப்படும்.
அவ்வாறாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் 18.04.22 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே மாதம் 13 ஆம் தேதிக்குள் மாணவர்கள் கட்டணத் தொகையை செலுத்துமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
மீண்டும் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 2021 ஆம் ஆண்டு 98,000 மாணவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு 98,000 மாணவர்கள், இது மட்டுமல்லாமல் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வாயிலாக 2021 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த 3,000 மாணவர்கள், 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த 3,000 மாணவர்கள் என கிட்டத்தட்ட 2 லட்சம் மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து பட்டம் பெறுவதற்காக பட்டமளிப்பு விழாவிற்கான தொகையை செலுத்தியுள்ளனர்.
அறிவிப்பின் அடிப்படையில் தொகை செலுத்தியும் பட்டமளிப்பு விழா நடைபெறாததால், மாணவர்கள் மத்தியில் இது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது வரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பட்டமளிப்பு விழாவிற்கான தேதியும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் பட்டமளிப்பு விழாவிற்கு முன் வெளியிடப்படும் செய்தி குறிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. அதன்படி, முனைவர் பட்டம் பெற இருக்கும் மாணவர்களும், 2023ஆம் கல்வியாண்டில் தரவரிசை தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களும், 16.8.2023க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்லாது விடுபட்ட 2022 ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் 2023 ஏப்ரலில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் 15.09.23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கால அடிப்படையை வைத்து பார்க்கும் பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடக்க வேண்டும். அப்படியானால் இந்நேரம் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து பட்டமளிப்பு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே பட்டமளிப்பு விழாவிற்கு பணம் செலுத்திய மாணவர்கள் பட்டம் பெறாமல் காத்திருக்கும் நிலையில், தற்போது பணம் செலுத்தியுள்ள மாணவர்களும் எப்பொழுது பட்டமளிப்பு விழா நடைபெறும் என தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக வாயில் முன்பு கருப்பு கோட் அணிந்து கருப்பு பட்டம் விடும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு இச்சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ஜி.கே. மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா் சூா்யா முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பட்டமளிப்பு சீருடை அணிந்து கைகளில் கருப்பு வண்ண பட்டங்களை ஏந்தி பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "ஆளுநர் தேதி தற்போதுவரை தராததே பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு மிக முக்கிய காரணம். உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்தக்கோரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு பட்டம் விடும் நூதனப் போராட்டத்தினை நடத்தி உள்ளோம்".
பட்டமளிப்பு தள்ளிப்போவதால் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை ஆகியவற்றை பெறுவதில் மாணவா்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பட்டம் பெற முடியாமல் தவிக்கின்றனர். பல்கலைக்கழகம் தேதி அறிவிக்காமல் கால தாமதம் செய்வதால் நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என்றனர்.
அதேநேரம் கடந்த பல ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாத நிலையில் பட்டமளிப்பு விழாவுக்காக மாணவர்கள் இருந்த பெற பெற்ற தொகை என்ன செய்யப்படுகிறது. எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலும் இல்லை. பட்டமளிப்பு விழா நடத்தாமலையே மாணவர்கள் இடம் இருந்து பட்டமளிப்பு விழாவுக்கு நிதி வசூலித்தது எந்த விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.