Trichy corporation plans to facilitate Smart classroom to all schools: திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 35 தொடக்கப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 61 பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்துவதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க போதுமான இடவசதி உள்ளதா என்பது குறித்தும், அந்தந்த பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, அது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தனர்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக, உறையூர் வடக்கு வாலாஜா சாலையிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் பிராட்டியூர் உயர்நிலைப்பள்ளியில் தலா ரூ.85 லட்சம் மதிப்பிலும், உறையூர் பாண்டமங்கலம் வடக்கு நாச்சியார் கோவில் சாலையிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் மு.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சூப்பர் சான்ஸ்; முதல்வர் ஆபிஸ் வேலை; மாதம் ரூ75000 சம்பளம்; விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பள்ளிகளில் வடக்கு வாலாஜா சாலையிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5 ஸ்மார்ட் வகுப்பறைகளும், பாண்டமங்கலம் நடுநிலைப்பள்ளியில் 4 ஸ்மார்ட் வகுப்பறைகளும் உருவாக்கப்படும், மீதமுள்ள பள்ளிகளில், தேவைக்கேற்ப ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.
புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளில் தொடுதிரை வழியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வசதி, தெளிவான ஒலி, ஒளி உட்கட்டமைப்பு, பிறநகரங்களில் இருந்தும் திரைவழியாக பாடம் நடத்தக்கூடிய வகையிலான தொலைத் தொடர்பு வசதி போன்றவை ஏற்படுத்தித் தரப்படும். மாநகராட்சி மாமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான பணிகள் தொடங்கும் என்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.