/tamil-ie/media/media_files/uploads/2022/08/holly-cross-college-trichy.jpg)
Trichy Holy cross college centenary function: புனித சிலுவை (ஹோலி கிராஸ்) தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நாளை மறுதினம் (ஆகஸ்ட் 10-ம் தேதி) துவங்குகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முன்னாள் மாணவிகள் முதல் அனைத்து மாணவர்களும் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி ஹோலி கிராஸ் தன்னாட்சிக் கல்லூரி என்பது பெண்களுக்கென இயங்கி வரும் மிகவும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரி தென்னிந்தியாவில் உள்ள பெண்களுக்கான பழமையான கல்லூரிகளில் முதன்மையானது.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு; கட் ஆஃப் எவ்வளவு?
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் ஹோலி கிராஸ் கல்லூரி 1923-ம் ஆண்டில் திருச்சிலுவை கன்னியர் சபை சகோதரிகளால் 5 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 6,236 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.
கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல் முதல்வரான அன்னை சோஃபியின் திறமையான வழித் தோன்றல்களைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட்டின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் இந்தக் கல்லூரி வளர்ந்துள்ளது.
2020-ம் ஆண்டு நான்காம் சுழற்சியில 3.75/4 தர மதிப்பீட்டைப் பெற்று A++ என்ற தகுதியை தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் பெற்றது. இளங்கலை பாடப்பிரிவில் 28 துறைகளையும், முதுகலை பாடப்பிரிவில் 22 துறைகளையும், 11 ஆய்வியல் நிறைஞர் துறைகளையும் மற்றும் 13 முனைவர் பட்டத்திற்கான துறைகளையும் கொண்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இக்கல்லூரியில் 6 இளங்கலை மற்றும் 5 முதுகலை துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இளங்கலைக்கான கற்றல் விளைவுகளின் அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சமூகத்திற்கு சேவை செய்வதற்காக புனித சிலுவை சமூக வானொலி 90.4MH தொடங்கப்பட்டு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/holly-cross-college-invite.jpg)
இங்கு பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், வாழ்க்கையின் சரியான மதிப்பீடுகளைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இளங்கலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக Rescaps திட்டத்திலும் மாணவர்கள் இணைந்துள்ளனர்.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற இருக்கும் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவில் இந்தியா மற்றும் நேபால் நாடுகளின் திருத்தந்தையின் தூதுவர் மேதகு பேராயர் லியோபோல்டோ கிரெல்லி ஆசியோடு தமிழக ஆயர் குழுமம் மற்றும் அருட்தந்தையர்களோடு இணைந்த ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி
நடைபெறுகின்றது.
இதனைத்தொடர்ந்து 100 ஆண்டுகள் நிறைவினை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரியின் வரலாறு காட்ச்சிப்படுத்தப்படுகின்றது. நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து “நிலைத்த வாய்மை நீடித்த தொண்டு உள்ளம்” என்ற விருதுவாக்கும், மீட்பினை உலகிற்கு உணர்த்தும் திருச்சிலுவையும், தன்னம்பிக்கையினை உணர்த்தும் வண்ணத்தையும் உடைய நூற்றாண்டு விழாவின் சின்னமானது வெளியிடப்படுகின்றது.
ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட் அனைவரையும் வரவேற்க, விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழக ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைக்கின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், புலம்பெயர்ந்த தமிழர்களின் மாநில ஆணையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் மறுவாழ்த்துறை ஆணையருமான ஜெசிந்தா லாசரஸ், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முனைவர் இசபெல்லா ராஜகுமாரி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
திருச்சி ஹோலி கிராஸ் தன்னாட்சிக் கல்லூரி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவிகளும், இந்நாள் மாணவிகளும் கலந்து கொள்ளவிருப்பதால் கல்லூரி வளாகம் இன்று முதலே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us