சட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 6 ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தருமான கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். விழாவில் 77 மாணவர்கள், 58 மாணவிகள் என மொத்தம் 135 பேருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நீதிபதி ஆர். மகாதேவன் பேசியதாவது; சட்டப் படிப்புகளில் சிறந்த மையமாக இந்தப் பல்கலைக்கழகம் வளர்ந்து வருகிறது. சட்டக் கல்விக்கான மையமாகவும் யு.சி.ஜி.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பட்டியலிலும் இது முக்கிய இடம் பிடித்துள்ளது. நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளைச் செயல்படுத்துவதிலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளிலும் இப்பல்கலைக்கழகம் முன்னணியில் உள்ளது. எனவே, இதை மேம்படுத்த நிதி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இங்கு பட்டம் பெற்றுள்ள இளையோர் சட்ட அறிவோடு, தைரியத்தையும் பெறுவது அவசியம். எந்தவொரு தொழிலிலும் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவது மிக அவசியம். மேலும் மாணவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்து, தங்கள் பலம், பலவீனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கல்விக்கு மாற்றோ முடிவோ கிடையாது. அதுதான் அறிவு உலகத்துக்கான நுழைவாயில், வெற்றிக்கான திறவுகோல். சட்டம் உள்ளிட்ட பிற துறைகளிலும் அறிவை ஆழப்படுத்த மாணவர்கள் தீவிரமாக ஆசைப்பட வேண்டும்.
உலகளவில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிறப்பிடம் பெற்றுள்ளது. சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது, அந்நிய நேரடி முதலீடு பெருமளவில் குவிந்துள்ளது. சட்டத் துறையிலும் உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதை பயன்படுத்திக் கொள்ள மாணவா்கள் தங்கள் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.நாகராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், மரியா கிளீட், ஷமிம் அகமது, முன்னாள் நீதிபதிகள் கே.என். பாஷா, பி.என். பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்