க.சண்முகவடிவேல்
திருச்சி திருவெறும்பூர் வட்டம் வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று ‘’எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் கற்றல், கற்பித்தலில் எவ்வித இடையூறும் இன்றி, முழுமையாக கல்வியைப் பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறது.
குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியைத் தருவதனையே முழு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் ஒருபடியாக தற்பொழுது அனைத்துப் பள்ளிகளிலும் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்னும் திட்டத்தைத் முன்னெடுத்துள்ளது.
இத்திட்டம் சுற்றுச்சூழல், சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து முதலிய அனைத்து வகையான அம்சங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்கிறது. இத்திட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள் சுத்தமாக வைத்திருப்பதனையும் பள்ளி வகுப்பறைகள் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டம் பள்ளிகளில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் பற்றிய அறிவினைப் பெற்று அக்குப்பைகளை கையாளவும் வழிவகை செய்கிறது.
சுத்தத்தின் நன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உணர்வதோடு தனது பள்ளியைப் போல தனது வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவும் வலியுறுத்துகிறது. மேலும், தன்னைப்போல் தன் சுற்றத்தாரும், உறவினர்களும் குடும்ப அங்கத்தினர்களும் சுத்தத்தை முதன்மையாக கொண்டு செயல்பட வழிகாட்டவும் அறிவுறுத்துகிறது
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளைச் சார்ந்த சுகாதார மருத்துவர்கள் மாணவர்களிடையே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் சார்ந்த அறிவினை மாணவர்கள் பெறுவதோடு பள்ளி வளாகத்திலேயே பள்ளிகளுக்கு தேவையான காய்கறிகளை இயற்கை வகையில் பயிரிடவும் அறிவுறுத்தப்படுகிறது. நெகிழி இல்லாத உலகை காண்பதற்காகவும், நெகிழி பயன்பாட்டை குறைப்பதற்காகவும், அதனைப்பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்காகவும் இத்திட்டம் மாணவர்களுக்கு வழி வகை செய்கிறது.
மேற்கண்ட விவரங்களைப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மற்றும் பிற துறை யினரிடமிருந்து பெற்று அதை நடைமுறைப்படுத்தும் மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்க்கையிலும் அதனை கடைப்பிடிப்பதால் சுத்தம் சுகாதாரம் என பல வழிகளிலும் வாழ்வியலோடு இணைந்து மாணவர்கள் பயன்பெற எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் வழிவகை செய்கிறது.
அப்படி பிரம்மாதமான இத்திட்டம் இன்று திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளித் தூய்மை உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)பேபி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புசேகரன், ஊராட்சி மன்றத்தலைவர் சின்னம்மாள் தேவராஜ், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி ஞானசௌந்தரி, ஆசிரிய பெருமக்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.