/indian-express-tamil/media/media_files/2025/10/22/indians-in-us-2-2025-10-22-17-37-08.jpg)
இந்த திட்டத்துடன் ஐஐடிகள் உடன்பட்டுள்ளன, மேலும் அவற்றின் பல இயக்குநர்கள் அரசாங்கத்துடன் செயல்படுத்தல் கட்டமைப்பு குறித்து விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். Photograph: (Express File/Pradeep Kochrekar)
டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்காவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் கல்வி சுதந்திரத்திற்குச் சவால் விடுப்பதாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்திய வம்சாவளி "நட்சத்திர பேராசிரியர்கள்" மற்றும் ஆராய்ச்சியாளர்களை இந்தியாவுக்குத் திரும்பி வந்து இந்திய நிறுவனங்களில் பணிபுரியச் செய்ய, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. இந்த விவாதங்கள் தற்போது வேகம் பிடித்துள்ளன.
பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம், இந்த முயற்சியின் வடிவத்தை உருவாக்குவதற்காக உயர்கல்வித் துறை (கல்வி அமைச்சகம்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (டி.பி.டி) ஆகியவற்றுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'-க்கு தெரியவந்துள்ளது.
குறிப்பிடத்தக்க கல்விப் பணிகளைச் செய்துள்ள "புகழ்பெற்ற" இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்கள் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுமதிப்பதாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு நிதிச் சுயாட்சி மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்க, அவர்கள் இந்தியாவில் ஆய்வகங்கள் மற்றும் குழுக்களை நிறுவ உதவும் வகையில், கணிசமான "செட்-அப் மானியம்" அனுமதிக்கப்படலாம். இந்தத் திட்டத்திற்கு ஐ.ஐ.டி-க்களும் ஆதரவு அளித்துள்ளன. பல ஐ.ஐ.டி. இயக்குநர்கள் இதைச் செயல்படுத்துவது குறித்த கட்டமைப்பை விவாதிப்பதில் அரசாங்கத்துடன் பங்கெடுத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், ஆரம்பத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம் - STEM) ஆகிய துறைகளில் 12 முதல் 14 முன்னுரிமைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளுக்குத் திறமையாளர்கள் அழைக்கப்படுவார்கள். தேசிய திறன் மேம்பாட்டிற்குத் திறன்சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் துறைகளும் இதில் அடங்கும்.
இத்தகைய திட்டத்தை வெற்றிகரமாக்க அரசுக்குத் தேவைப்படும் நிறுவன மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து கேட்டபோது, எம்.ஐ.டி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் கல்வியாளரும், நான்கு ஆண்டுகளுக்கு அடல் புத்தாக்க இயக்கத்தின் பணி இயக்குநராகப் பணியாற்றியவருமான டாக்டர். சிந்தன் வைஷ்ணவ் பின்வருமாறு கூறினார்:
“இந்தத் திட்டத்தின் உள்ளீட்டுப் பக்கத்தில் (input side), அவர்களின் அனுபவங்களைத் தடையற்றதாக மாற்றும் வழிமுறைகளை உருவாக்குவது இப்போது முக்கியமாகும் — அதாவது, வீட்டு வசதி, உபசரிப்பு, தினசரித் தேவைகள் — இவை இல்லாவிட்டால் தொந்தரவாக மாறும் அனைத்துச் சிறிய விஷயங்களையும் சீராக்க வேண்டும். இந்த பகுதிக்கு வெறும் கொள்கை நோக்கத்துடன் இல்லாமல், 'சிவப்புக் கம்பள வரவேற்பு' தேவை.” என்றார்.
ஒத்துழைப்பிற்கான மூலப்பொருள் இந்தியாவில் உள்ளது என்றும், இந்திய நிறுவனங்கள் நீண்ட காலமாகவே சர்வதேசப் பங்களிப்புகளைக் கொண்டுள்ளன என்றும், வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட இந்திய அறிஞர்களிடையே உண்மையான ஆர்வம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
“நிதி ரீதியாக, நாம் ஒருபோதும் உலகளாவிய சம்பளத்துடன் பொருந்த முடியாது, ஆனால், இங்கே ஒரு உணர்ச்சிபூர்வமான ஈர்ப்பு உள்ளது; நல்ல சிக்னலிங் திறமையைக் கொண்டு வரும். விளைவுகள் பக்கத்தில் (output side), சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அவர்களை சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். கண்காணிப்பு மற்றும் அறிக்கை அளிக்கும் பணிகள் ஆராய்ச்சியின் ஆற்றலை வடிகட்டிவிடும் அளவுக்குச் சிரமமாக இருக்கக் கூடாது. அறிவுசார் சொத்துரிமை குறித்த தெளிவை நாம் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். இஸ்ரோவில் விக்ரம் சாராபாய் அணுகுமுறை போல இது இருக்க வேண்டும் - சிறந்தவர்களை நம்பி, மேற்பார்வையைக் குறைவாக வைத்து, பரிவர்த்தனைக்குரிய பரிமாற்றங்களை விட நீண்ட கால உறவுகளை உருவாக்க வேண்டும்” என்று டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் கூறினார். மேலும், அறிஞர்களை வரவேற்கும் நிறுவனங்கள் குறுகிய கால 'அறிமுகப் பயிற்சி' திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிரம்ப் தலையீடுகளுக்கு மத்தியில் உலகளாவியப் போட்டி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்கல்வித் துறையில் தனது தலையீடுகளை அதிகரித்துள்ள ஒரு நேரத்தில், இந்த விவாதங்கள் வந்துள்ளன. இது பல்கலைக்கழகத் தன்னாட்சி மற்றும் கல்விச் சுதந்திரத்திற்கு நேரடியாகச் சவால் விடுகிறது.
ஒரு முக்கிய நடவடிக்கையாக - உயர்கல்வியில் கல்விச் சிறப்புக்கான ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் திட்டம் - அமெரிக்க நிறுவனங்கள் ஒரு தொடர்ச்சியான சித்தாந்த மற்றும் கட்டமைப்பு நிபந்தனைகளுக்கு (சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்புகள், இனம் அல்லது பாலின அடிப்படையிலான சேர்க்கைக்குத் தடை மற்றும் கல்விக் கட்டண முடக்கம் உட்பட) ஒப்புக்கொண்டால் மட்டுமே, மேம்பட்ட மத்திய நிதிக்கு அணுகலைப் பெற முடியும் என்று கூறியது. அதே நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற சிறந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளை மாற்றியமைக்கக் கோரியதன் ஒரு பகுதியாக, பல பில்லியன் டாலர் மத்திய மானியங்கள் முடக்கப்பட்டன. விமர்சகர்கள் இந்த நடவடிக்கைகளை நிறுவனச் சுதந்திரத்தை கட்டாயப்படுத்தி அடக்குவதற்குச் சமம் என்று கூறுகின்றனர்.
இத்தகைய தலையீடுகளின் விளைவாக, ஐரோப்பாவில் கல்விச் சுதந்திரம் மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியை வலுப்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கல்விச் சுதந்திரத்தை ஐரோப்பிய சட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புவதாகச் சமீபத்தில் கூறினார். சீனா, வெளிநாட்டுச் சீன விஞ்ஞானிகள் மற்றும் முன்னணி வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை அதிக நிதி அளிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முயற்சிகள் மூலம் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அதே சமயம், தைவான் தனது உயர்கல்வி அமைப்பை சர்வதேசமயமாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 6 புதிய ஆராய்ச்சி மையங்களை அறிவித்துள்ளது.
இந்தியா தனது ஆராய்ச்சி நிறுவனங்களை இந்த உலகளாவிய போட்டியில் நிலைநிறுத்தவே இந்தப் புதிய திட்டம் முயற்சி செய்கிகிறது என்று இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானத் திறமையாளர்கள் வெளிநாடு செல்வது குறித்த நீண்டகால கவலைகளை இந்த நடவடிக்கை தீர்க்க உதவும் என்றும், நாட்டின் புத்தாக்கச் சூழலை வலுப்படுத்தும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.
வெளிநாட்டு விஞ்ஞானிகள், குறிப்பாக இந்திய வம்சாவளியினர், உள்நாட்டு நிறுவனங்களுடன் குறுகிய காலத் திட்டங்களில் ஒத்துழைக்க இந்தியா ஏற்கனவே சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த முயற்சி முழு நேர அல்லது நீண்ட கால நியமனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (டி.எஸ்.டி) நடத்தப்படும் வஜ்ரா (VAJRA) (வருகைதரும் மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சிப் பேராசிரியர் திட்டம் - Visiting Advanced Joint Research Faculty Programme) திட்டமானது, உலகளாவிய உயர் திறமைகளை ஆண்டிற்கு மூன்று மாதங்கள் வரையிலான குறுகிய கால, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பணிக்காக இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலுக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பங்கேற்பு விகிதம் மிதமானதாகவே உள்ளது. இது 2017-18-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 100 வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கும் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை இந்தத் திட்டம் எளிதாக்கியுள்ளது. இதன் விளைவாக சுமார் 60 கூட்டுத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று இந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
வெளிநாட்டில் உள்ள சிறந்த பேராசிரியர்களை ஈர்ப்பதில் இந்தியா கட்டமைப்பு ரீதியான தடைகளை எதிர்கொள்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 2019-ல் 'இன்டர்நேஷனல் ஹையர் எஜுகேஷன்' இதழில் (பாஸ்டன் கல்லூரி சர்வதேச உயர்கல்வி மையம் வெளியிட்டது) வெளியான ஒரு கட்டுரையில், அதன் நிறுவன ஆசிரியரான பிலிப் ஜி. ஆல்ட்பாக் மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர் எல்டோ மேத்யூஸ் ஆகியோர், “இந்தியப் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு மற்றும் நடைமுறை உண்மைகள் பொதுவாக வெளிநாட்டுத் திறமையாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சம்பளங்கள் "உலகளவில் போட்டியிடும் நிலையில் இல்லை" — இந்தியாவில் ஒரு முழுநேரப் பேராசிரியர் ஆண்டுக்கு சுமார் 38,000 அமெரிக்க டாலர்கள் ஈட்டுகிறார். இது அமெரிக்காவில் 1,30,000 – 200,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். சீனாவில் சுமார் 1,00,000 லட்சம் அமெரிக்க டாலர்கள் உடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
அலுவலகச் சிகப்பு நாடா (Bureaucratic red tape), வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சிக்கான நிதி மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் இல்லாதது ஆகியவை சர்வதேச அறிஞர்களைத் தடுக்கின்றன.
பொது நிறுவனங்கள் "சர்வதேசப் பேராசிரியர்களைப் பணியமர்த்துவதில் குறைவான அனுபவமே கொண்டுள்ளன," மேலும் பல அரசுத் துறைகள் வழியாக ஒப்புதல்களைப் பெறுவது "நேரத்தைச் செலவழிப்பதாக" உள்ளது என்றும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்விச் சிறப்பிற்கான உலகளாவியப் போட்டியில் இந்தியா வெற்றி பெற விரும்பினால், இந்தக் கட்டுப்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த முன்மொழியப்பட்ட திட்டம், வெளிநாட்டு இந்திய ஆராய்ச்சியாளர்களைத் திரும்பக் கொண்டு வருவதற்கான கடந்தகால முயற்சிகளின் வரம்புகளை - செயல்முறை தாமதங்கள், நிதியுதவி நிச்சயமற்ற தன்மை மற்றும் வரையறுக்கப்பட்ட நிறுவன ஆதரவு உட்பட - நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சிச் சுயாட்சி மற்றும் பணி நியமனக் காலம் (tenure structure) தொடர்பான நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us