பெரம்பலூரில் கிறிஸ்டியன் கல்வி நிறுவன வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி கற்றல் ஆதரவு மைய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பெரம்பலூர் மைய பொறுப்பு அதிகாரி காமராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி இயக்குநர் சீனிவாசன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வியில் புதிதாக 24 டிப்ளமோ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதில் முக்கியமாக டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, பொது நிர்வாகம் உள்பட 24 படிப்புகளுக்கு வரும் ஜனவரி 2025-ஆம் ஆண்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் இல்லாத வகையில் புதிய டிப்ளமோ படிப்புகள் இரண்டு செமஸ்டராக அமைய உள்ளது.
மேலும், இந்திய அளவில் வேலைவாய்ப்பிற்கு உகந்த விதத்தில் 4 பாடங்களாக இருந்த பட்டயப் படிப்புகள், தற்பொழுது 8 பாடங்களுடன் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி கல்வி கட்டணத்தையும் இரண்டு தவணைகளாக செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த டிப்ளமோ படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். மேலும், முதுகலை பாடப்பிரிவுகளான வணிக மேலாண்மை, ஆங்கிலம், பொருளாதாரம், தமிழ், பயன்பாட்டு உளவியல், தாவரவியியல், வேதியியல், இயற்பியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், நுண்ணுயிரியல், விலங்கியியல் ஆகியவற்றிலும் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்" எனத் தெரிவித்தார்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“