இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 'காமதேனு கவு-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் எக்ஸாமினேஷன்" எனும் தேர்வில் மாணவர்களை கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து பல்கலைக்கழகங்களையும் கேட்டுள்ளது.
மானியக் குழு செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்களுக்கு எழுதிய கடிதத்தில், " பிப்ரவரி 25 அன்று இந்த இணையவழித் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முயற்சியில் மாணவர்களின் பரவலான பங்கை உறுதிப்படுத்தும் வகையில், தேர்வில் தங்களை பதிவு செய்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
நாட்டுப் பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், “காமதேனு கவு-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் எக்ஸாமினேஷன்” என்னும் தேர்வை நடத்த இருப்பதாக தேசிய காமதேனு ஆயோக் சில நாட்களுக்கு முன்பு தெரிவ்த்த நிலையில் யுஜிசியின் இந்த கடிதம் வெளியாகியுள்ளது.
ஆங்கிலம், இந்தி மற்றும் 12 பிராந்திய மொழிகளில் 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். ஆரம்ப வகுப்புகள் முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, கல்லூரி மாணவர்களுக்காக, பொதுமக்கள் என நான்கு மட்டத்தில் தேர்வு நடைபெற உள்ளது.
பசுக்கள் குறித்த ஆர்வத்தை அனைத்து இந்தியர்களிடையே ஏற்படுத்தவும், பசுக்களின் அதிகம் அறியப்படாத நன்மைகளையும், தொழில் வாய்ப்புகளையும் குறித்து அறியச் செய்யவும் இது வழி வகுக்கும் என தேசிய காமதேனு ஆயோக் தெரிவித்திருந்தது.
UGC asks varsities to encourage students to take ‘cow science’ exam
முன்னதாக, தேர்வு தொடர்பாக ஆயோக் 54 பக்க “பாடக் குறிப்பு ” ஒன்றை ஆயோக் தனது இணைய தளத்தில் பதிவேற்றியிருந்தது. "கிருமி நாசினிகள்", "டூத் பாலிஷ்", "கதிரியக்க எதிர்ப்பு" பண்புகள் பசு சாணத்தில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த தகவல் வைரலான பின்பு, இணையதளத்தில் இருந்து பாடக்குறிப்பு நீக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை ஏற்படுத்துவது தொடர்பாக யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் ஏஐயு ஆகியவற்றுடன் இணைந்து தேசிய இணைய கருத்தரங்கை தேசிய காமதேனு ஆயோக் ஏற்பாடு செய்தது. அப்போது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கையை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.