/indian-express-tamil/media/media_files/fUMfB602xxpfKL5nd7oy.jpg)
அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்வதால், எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது. Photograph: (IE)
திறந்தநிலை மற்றும் இணையவழி கல்வித் திட்டங்களில் சேரும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது. அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்வதால், எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
யு.ஜி.சி செயலாளர் மணிஷ் ஆர். ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அக்டோபர் 15-ம் தேதி வரை திறந்தநிலை மற்றும் இணையவழிப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும், மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை https://deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சில குறிப்பிட்ட படிப்புகளைத் திறந்தநிலை மற்றும் இணையவழி முறையில் பயிற்றுவிக்க அனுமதி இல்லை என யு.ஜி.சி தெளிவுபடுத்தியுள்ளது. அவை:
பொறியியல் (Engineering)
மருத்துவம் (Medicine)
தொழில்நுட்பம் (Technology)
திட்டமிடல் (Planning)
ஓட்டல் மேலாண்மை (Hotel Management)
உணவுத்தொழில்நுட்பம் (Food Technology)
கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு (Craft & Design)
இயன்முறை சிகிச்சை (Physiotherapy)
கட்டிடக்கலை (Architecture)
சட்டம் (Law)
வேளாண்மை (Agriculture)
தோட்டக்கலை (Horticulture)
மருத்துவ சேவை சார்ந்த படிப்புகள்
தடை விதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்
2024-25 மற்றும் 2025-26 கல்வியாண்டுகளில் இணையவழிக் கல்வி வழங்க தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் கியான் விகார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு யு.ஜி.சி தடை விதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் இதுபோன்ற படிப்புகளில் சேரும்போது, அரசின் அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என யு.ஜி.சி வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.