இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மாணவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அதே நேரம் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதேபோல், கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.
தற்போகு கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து, நிலைமை படிப்படியாக சீரடைந்துள்ளது. நடப்பாண்டு பள்ளி, கல்லூரிகளில் சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தாமல் நேரடி தேர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும், ஆன்லைனில் நடத்தலாமா? ஆஃப்லைனில் நடத்தலாமா? எனக் குழப்பங்கள் நீடித்து வந்தது.
இந்த குழப்பத்தை போக்கும் வகையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தற்போதைய செமஸ்டர் மற்றும் அடுத்து வரும் செமஸ்டர் தேர்வுகளையும் நேரடியாகவே நடத்த வேண்டும். தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் முன்கூட்டியே உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாடங்களை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வை நேரடியாக வைப்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுஜிசியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil