Ritika Chopra
கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission – UGC) திருத்தப்பட்ட வழிமுறைகளை, வேறு வழியின்றி மாநில அரசுகள் கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
சமீபத்தில் வெளியான யுஜிசி- ன் திருத்தப்பட்ட வழிமுறைகளை எதிர்த்து நான்கு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 6ம் தேதி, பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசி-யின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு கால அட்டவணையையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அதில், இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் யுஜிசியின் வழிகாட்டுதல்களை எதிர்த்தன. மேலும், வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தங்களின் இயலாமையையும் வெளிப்படுத்தின.
வெள்ளியன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், கடந்த கால செயல்திறனின் அடிப்படையில் மாணவர்கள் பதவி உயர்வு பெற வேண்டும்” என்ற கருத்தை பதிவு செய்து #SpeakUpForStudents என்ற ட்விட்டர் ஹஷ்டேக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இருப்பினும், மத்திய அரசு பல்கலைக்கழகந்களுக்கான தேர்வுகள் குறித்த வழிமுறைகளை திரும்பப் பெற வாய்ப்பில்லை. மாறாக, தனது வழிமுறைகளை அனைத்து பல்கலைக்கழகங்கள்/கல்வி நிலையங்கள் காட்டாயம் பின்பற்ற வேண்டும் என யுஜிசி நிர்பந்திக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
“தேர்வு இல்லாமல், வாங்கும் பட்டங்களுக்கு மதிப்பு ஏது? இதுபோன்ற முடிவு, இக்கல்வியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும். நாங்கள் ஒரு ஜனரஞ்சக அணுகுமுறையை கடைப்பிடித்து அனைவரையும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க வேண்டுமா? அல்லது இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொள்ள வேண்டுமா? ” என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தேர்வுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு யு.ஜி.சி சட்டத்தால் அதிகாரம் பெற்றிருப்பதால், தேர்வுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
“யுஜிசி சட்டம் 1956 இன் பிரிவு 12,”பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், தேர்வு, ஆராய்ச்சி ஆகியவற்றின் தரங்களை மேம்படுத்த தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் யுஜிசி எடுக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார். 2003 யுஜிசி ஒழுங்குமுறையின் கீழ், பல்கலைக்கழகங்கள் அவ்வப்போது மானியக் குழு வழங்கிய தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மாநில அரசுகள் எழுதிய கடிதங்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
பெரும்பாலான பல்கலைக்கழக வளாகங்கள் தனிமைப்படுத்துதல் மையமாக பயன்படுத்தப்படும் சூழலில் தேர்வுகள் எங்ஙனம் சாத்தியம் என்று கேள்விக்கு,“ செப்டம்பர் மாதம் வரை தேர்வுகளை நடத்த அவகாசம் உள்ளது. ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) என எந்த முறையிலும் தேர்வை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு சுயாட்சி உள்ளது. எல்லா கல்வி நிறுவனங்களும் தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை ” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் #SpeakUpForStudents எனும் சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கியது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் யுஜிசி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறித்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி தனது வீடியோவில், “கோவிட் அணைத்து வகையான மக்களையும் பாதித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள எங்கள் மாணவர்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டனர். ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ரத்து செய்த பின்னர், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. யுஜிசி குழப்பத்தை உருவாக்குகிறது. தேர்வுகளை ரத்துசெய்து, மாணவர்களின் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook