2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க, அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிரப் பங்களிப்பு மிகவும் அவசியம் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்பூர்ணா தேவி கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தர், முனைவர் பாரதிஹரி சங்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்பூர்ணாதேவி கலந்து கொண்டு உயர்கல்வி முடித்த மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர், “இந்திய பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் சுயசார்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நகர்கிறோம். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க, அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிரப் பங்களிப்பு மிகவும் அவசியம். கடந்த 2020 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன,” என்று கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த 83 மாணவியருக்கு அமைச்சர் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து, கலை மற்றும் சமூக அறிவியல் புலம், மனையியல் புலம், உயிர் அறிவியல் புலம் இயற்பியல் மற்றும் கணக்கீட்டு அறிவியல்புலம், வணிகம் மற்றும் மேலாண்மையியல் புலம், கல்வியியல் புலம், உடல்நலப் பராமரிப்பு அறிவியல் புலம் மற்றும் பொறியியல் புலம் ஆகிய துறைகளை சார்ந்த 2472 மாணவியர் பட்டம்பெற்றனர். இளநிலையில் 1814 பேரும் முதுநிலையில் 615 பேரும், முதுநிலைபட்டய படிப்பில் 9 பேரும், ஆய்வியல் நிறைஞர் உட்பட முனைவர் பட்டம் 33 பேர் என மொத்தம் 2472 மாணவியர் பட்டங்களைப் பெற்றனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“