கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன? கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 21725 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 35092 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 1905 பள்ளிகளும் இயங்கி வருகின்றன; கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 21725 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 35092 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 1905 பள்ளிகளும் இயங்கி வருகின்றன; கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanimozhi

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயாக்களில் பணிபுரியும் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு கல்வி அமைச்சர் பதில் அளித்தார்.

Advertisment

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கல்வித் துறை தொடர்பான சில முக்கிய வினாக்களை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார்.

”நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் கீழ் கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் மாநில வாரியாக என்னென்ன?

இந்த மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்; இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் மாநில வாரியாக என்ன?

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது பணிபுரியும் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

மாணவர்களுக்கு அந்தந்த தாய்மொழிகளில் கற்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏதேனும் திட்டங்கள் வகுத்துள்ளனவா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்?” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “தேசிய கல்விக் கொள்கையின் பத்தி 4.13 இல், அரசியலமைப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு மக்கள், மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்தின் விருப்பங்களை மற்றும் பன்மொழித் தன்மையை மேம்படுத்துவதன் அவசியத்தையும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதையும் மனதில் கொண்டு மும்மொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறுகிறது. 

எனினும், மும்மொழிக் கொள்கை அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கிறது. அதாவது எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாக இருக்கும் வரை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மூன்று மொழிகளும் மாநிலங்களுடைய தேர்வாகவும் இன்னும் சொல்லப் போனால் நிச்சயமாக மாணவர்களின் விருப்பங்களாக இருக்கும்.

குறிப்பாக, தாங்கள் படிக்கும் மூன்று மொழிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மாற்ற விரும்பும் மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்குள் (இலக்கிய மட்டத்தில் இந்தியாவின் ஒரு மொழி உட்பட) அடிப்படைத் தேர்ச்சியை நிரூபிக்க முடிந்தால், 6 அல்லது 7 ஆம் வகுப்பில் அவ்வாறு செய்யலாம்.

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது இது இந்தியாவில் மொழிக் கல்வி குறித்த முன்னோக்குகளுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒருமொழி பயிற்றுவிக்கும் 23280 பள்ளிகளும், இரு மொழி பயிற்றுவிக்கும் 20693 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 211114 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 11428 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 43596 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 68388 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 21725 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 35092 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 1905 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) வரையறுக்கப்பட்டுள்ளபடி கேந்திரிய வித்யாலயாக்களுக்கு "குறிப்பிட்ட வகை" என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் சீரான கல்வித் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் நிறுவப்பட்டுள்ளன. 

எனவே, அனுமதிக்கப்பட்ட மொழி ஆசிரியர் பதவிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே. இருப்பினும், கேந்திரிய வித்யாலயாவிற்கான கல்விச் சட்டத்தின் பிரிவு 112 இன் படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்களுக்கு பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. இந்த விதியின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்தால், ஒரு ஆசிரியரை பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தலாம்.

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்பிப்பதற்காக பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதலாக, 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் மெய்நிகர் அகாடமி (TVA) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று பதிலளித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Kendriya Vidyalaya Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: