கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் அரசுப் பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாட்டோம் என உயர் சாதி மாணவர்கள் கூறியதில் சர்ச்சை ஏழுந்த நிலையில், தற்போது அதே விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சம்பாவத் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் முதல்வர் பிரேம் சிங் கூறியதாவது, டிசம்பரில் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட சுனிதா தேவி சமைத்த உணவை, 7-8 மாணவர்கள் மீண்டும் சாப்பிட மறுத்துவிட்டதாக தெரிவித்தார். மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த சம்பாவத் மாவட்ட நீதிபதி நரேந்தர் சிங் பண்டாரி, அந்த மாணவர்களின் பெற்றோரை சந்தித்து பேசினார். அவர்களிடம் உணவை சாப்பிட மாணவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கிடைத்த தகவலின்படி, நீதிபதியும், காவல் துறையினரும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் மதிய உணவை சாப்பிடுவதை புறக்கணிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், அதிகாரிகளும் பள்ளியிலே மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். இருப்பினும், 7 முதல் 8 மாணவர்கள் உணவை சாப்பிட மறுத்துள்ளனர். அதற்கு, அரிசி பிடிக்காது என பதிலளித்தாக கூறப்படுகிறது.
முந்தைய தினம், பெற்றோரை சந்தித்து பள்ளி முதல்வர் பேசியுள்ளார். மாணவர்கள் உணவை சாப்பிட மறுத்தால், பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்ததாகவும் தெரிகிறது. அப்போது, மீட்டிங்கில் பேசிய பெற்றோர், உணவை சாப்பிடுமாறு மாணவர்களிடம் கூறுகிறோம். அதேசமயம், கட்டாயம் சாப்பிட வேண்டும் என மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என கூறியதாக தி இந்தியன் எஸ்க்பிரஸ்ஸூக்கு தகவல் கிடைத்தன.
கடந்தாண்டு டிசம்பர் 13 அன்று, சுமார் 66 மாணவர்கள் சுனிதா சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் என தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக குற்றச்சாட்டி சுனிதாவை பள்ளியில் இருந்து நீக்கினர்.
பின்னர், சுனிதாவுக்கு பதிலாக பணியமர்த்தப்பட்ட உயர்சாதி பெண் தயாரித்த உணவை சாப்பிட மாட்டோம் என 23 தலித் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுனிதா பணி நீக்கம் குறித்து எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் புகார் அளித்தார். இதையடுத்து, அவரை மீண்டும் பணியில் சேர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதுகுறித்து பேசிய சுனிதா, 7 முதல் 8 மாணவர்கள் சாப்பிடாமல் இருப்பது, எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. சாப்பிட விரும்புவோர்களுக்கு மட்டுமே உணவு சமைக்க என்னிடம் கூறியிருக்கிறார்கள் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil