யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் முதல் 100 ரேங்க்களில் இடம்பெற்றுள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை நேற்று (ஏப்ரல் 16) வெளியிட்டது. மொத்தம் 1016 இடங்களை நிரப்புவதற்கான தேர்வர் பட்டியலை யூ.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 45 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 5 பேர் முதல் 100 ரேங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறாமல் இருந்த நிலையில், இந்த 5 பேர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த ஆவடியைச் சேர்ந்த 27 வயதான டி.புவனேஷ்ரம் தனது ஆறாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 41வது ரேங்க் பெற்றுள்ளார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டதாரியான 24 வயதான பிரசாந்த், தனது முதல் முயற்சியிலேயே 78வது ரேங்க் பெற்றுள்ளார். பிரசாந்த் மருத்துவ படிப்பில் 40 தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்.,ஸில் சேர்ந்த கடைசி மாணவர் பிரசாந்த் ஆவார்.
தொழிலாளர் செயலாளர் அதுல் ஆனந்தின் மகள் எஷானி ஆனந்த், நான்காவது முயற்சியில் 79வது ரேங்க் பெற்றுள்ளார். எஷானி ஆனந்த் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் முடித்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 200 ரேங்கிற்குள் அதிக தமிழக தேர்வர்கள் உள்ளனர். இதனால் ஐ.ஏ.எஸ் கேடரில் அதிக தமிழக மாணவர்கள் சேருவார்கள். கோவிட்க்குப் பிறகு, அரசு வேலைகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். தேர்வில் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“