யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஜீஜீ தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழில் தேர்வெழுதிய சுப்புராஜ் 621 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு செவ்வாய்கிழமை (மே 23) முடிவுகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டது. இதில் முதல் 4 இடங்களை பெண் தேர்வர்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கரிமா லோஹியா, உமா ஹரதி மற்றும் ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: UPSC Results: யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல் 4 இடங்களை பிடித்து பெண் தேர்வர்கள் அசத்தல்
தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஜீஜீ முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் 107 ஆவது இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 117 ஆவது இடத்தையும், நெல்லையைச் சேர்ந்த சுபாஷ் கார்த்திக் 118 ஆவது இடத்தையும், சரவணன் 147 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர் புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அருண் 426 ஆவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த மதிவதனி 447 ஆவது இடத்தையும், கார்த்திக் 488 ஆவது இடத்தையும், எழிலரசன் 523 ஆவது இடத்தையும், குடியரசு என்ற அரசு ஊழியர் 849 ஆவது இடத்தையும், ராகுல் 858 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்கள் தவிர, தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்றவர் தமிழில் எழுதி, அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்துள்ளார். சுப்புராஜ் தற்போது ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வை இவர் தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil