யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நாளை (பிப்ரவரி 14) சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (CSE) 2024 விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குகிறது. பதிவு தொடங்கியதும், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/ என்ற பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டு, UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு 1105 காலியிடங்களை அறிவித்தது. கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு மே 28 ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டது.
விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்படும் நிலையில், தகுதிக்கான அளவுகோல்களும் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் தகுதி அளவுகோல்களை அறிந்திருக்க வேண்டும். தேர்வு அறிவிப்பு UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது – https://upsc.gov.in/
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது அல்லது அதிகபட்சம் 32 வயதை எட்டியிருக்க வேண்டும். இருப்பினும், SC, ST, OBC, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல போன்ற சில பிரிவுகளுக்கு உச்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
UPSC CSE தேர்வு முதற்கட்ட தேர்வு, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு எழுதுவார்கள். பின்னர் இந்தக் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
UPSC CSE முதல்நிலைத் தேர்வு மே 26, 2024 அன்று நடைபெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“